பொதுவாக தெற்காசிய பகுதிகளில் நடக்கும் திருமணங்கள் அதன் பிரம்மாண்டத்திற்காக பெயர் பெற்றவை. நீண்ட நாட்கள் நடக்கும் சடங்குகள் பெரும்பாலும் பார்ப்பவர்களுக்கு விசித்திரமானதாக தோன்றும். நம்மூரில் நடக்கும் திருமணங்களில் முந்தைய நாள் கொண்டாட்டங்கள் முதல் திருமணத்திற்கு பிந்தைய நாள் கொண்டாட்டங்கள் வரை பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கும். தற்போது நடக்கும் திருமணங்களில் ஆடம்பரத்திற்கு பஞ்சம் இருப்பதில்லை. அப்படித்தான் பஞ்சாபின் சிந்து மாகாணத்தில் உள்ள மணமகனின் தந்தை பெண்ணின் வீட்டைச் சுற்றி பண மழை பெய்யச் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வரும் வீடியோவில் மணமகளின் வீட்டின் மேல் ஒரு விமானம் பறப்பதைக் காண முடிகிறது. அதிலிருந்து மணமகளின் வீட்டில் பணம் போடப்படுகிறது. இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் செல்வத்தை வீணடிப்பது குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். மற்றவர்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர். இதற்காக மாப்பிள்ளையின் தந்தை தனது மகனின் திருமணத்திற்காக ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து மணமகளின் வீட்டில் லட்சக்கணக்கான ரூபாயை பறக்கவிட்டுள்ளார்.

சமூக ஊடக தளமான X-இல் வெளியான இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக "மணமகளின் தந்தை வேண்டுகோளுக்கு இணங்க மணமகனின் தந்தை ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து மணமகளின் வீட்டில் மில்லியன் கணக்கான ரூபாயை பறக்க விட்டார் என்று எழுதப்பட்டு போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி சமூக ஊடக தளங்களில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்ய தொடங்கினர்.
ஒரு X பயனர், இனி மணமகன் தனது வாழ்நாள் முழுவதும் தந்தையின் கடனை தொடர்ந்து செலுத்துவார் என்று பதிவிட்டு இருந்தார். சில பயனர்கள் தங்களுடைய பிரம்மிப்பை வெளிப்படுத்தினர். வானத்திலிருந்து பணத்தை வீசுவதற்கு பதிலாக இந்த பணத்தை பிறருக்கு உதவி செய்ய பயன்படுத்தி இருக்கலாம் என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் உங்கள் செல்வத்தை எப்படியெல்லாம் செலவு செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு பயனர் இவர்களின் அபத்தத்தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. மணமகனை விட அண்டை வீட்டார் தான் இப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.
இது போன்ற வினோதமான திருமண போக்குகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக திருமண ஊர்வலங்களை நடத்துவது, மக்கள் கூடும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பது போன்ற சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் கலாச்சாரங்கள் திருமணத்தில் அதிகரித்தாலும் விழாக்களை நடத்தும் போது வீண் விரயத்தை தவிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications