மும்பை: நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே மும்பை தான் நம் நினைவுக்கு வரும். மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மிக ஆடம்பரமாகவும் பிரம்மாண்டமாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் .
மும்பை: பல்வேறு அவதாரங்களில் விநாயகரின் உருவச் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவதை நம்மால் காண முடியும். பண மாலை அணிவித்து விநாயகர் சிலைக்கு வழிபடுவது, தங்கத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது, விநாயகர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை போல வடிவமைத்து பூஜை செய்வது என பல வினோதமான விஷயங்களை நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் ரசிக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி: அந்த வகையில் இந்தியாவிலேயே காஸ்ட்லியான ஒரு விநாயகராக மும்பையில் இருக்கும் ஒரு விநாயகர் இருக்கிறார். மும்பையின் ஜிஎஸ்பி சேவா மண்டல் அமைப்பினர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொது இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்துவார்கள். இவர்களின் கொண்டாட்டம் மட்டும் தனித்துவமாக இருக்கும்.
பிரம்மாண்ட விநாயகர் சிலை: இவர்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது தங்கம் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்படும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை அமைப்பதில் புகழ்பெற்றவர்கள். இந்த அமைப்பினர் கிங் சர்க்கிள் பகுதியில் நிறுவ இருக்கும் தங்களுடைய விநாயகர் சிலையை தங்கம் மற்றும் பல்வேறு விலை உயர்ந்த ஆபரணங்களை கொண்டு பிரம்மாண்டமான முறையில் அலங்கரிப்பார்கள்.
பணக்கார கணபதி: மும்பை நகரத்தின் பணக்கார கணபதியாக பிரசித்தி பெற்றதுதான் கிங் சர்க்கிள் ஜிஎஸ்பி பந்தலில் நிறுவப்படும் விநாயகர் . இந்த விநாயகர் சிலையை இவர்கள் காப்பீடு செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விநாயகர் சிலையை 474 கோடியே 46 லட்சத்திற்கு இவர்கள் காப்பீடு செய்து இருக்கின்றனர். பந்தல், சிலை, ஆபரணங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த காப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.
காப்பீடு: இந்த சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பே 67 கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது . பந்தலில் வைக்கப்படும் பொருட்கள் 2 கோடி ரூபாய்க்கும், அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு 30 கோடி ரூபாய்க்கும் காப்பீடு பெறப்பட்டிருக்கிறது , பந்தல் பணியாளர்களுக்கு 375 கோடி மற்றும் 43 லட்சம் ரூபாய்க்கு தீ விபத்து காப்பீடும் எடுக்கப்பட்டிருக்கிறது.
தங்கம், வெள்ளி: இந்த விநாயகருக்கு 69 கிலோ தங்கம் 336 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொண்டு அலங்கரிக்க உள்ளனர். இந்த பிரம்மாண்டத்தை காணவே மும்பை வாழ் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து இந்த விநாயகரை வழிபாடு செய்து செல்வார்கள். 27ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை 5 நாட்களுக்குள் இங்கே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது. 48 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் இங்கே கண்காணிப்பு பணி நடைபெறும். 24 மணி நேரமும் பக்தர்களும் வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்துவார்கள். இந்த காப்பீடு தொகைக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்தினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை, கடந்த ஆண்டே இதே விநாயகருக்கு 400 கோடி ரூபாய்க்கு காப்பீடு பெற்றிருந்தனர்.


Click it and Unblock the Notifications