இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கௌதம் அதானி துறைமுகம் முதல் ஏர்போர்ட் வரை, சமையல் எண்ணெய் முதல் டேட்டா சென்டர் வரை என பல துறையில் வர்த்தகம் செய்து வரும் வேளையில், தற்போது விளையாட்டுத்துறையில் தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளார். கௌதம் அதானி குஜராத்தைப் பூர்வீகமாக கொண்டிருக்கும் வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க விருப்பம் கொண்டு பெரிய தொகைக்கு டீல் பேசி வருகிறார்.
அதானி குழுமம் ஏற்கனவே மகளிர் பிரீமியர் லீக் (WPL) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட இண்டர்நேஷனல் லீக் டி20 ஆகியவற்றில் சொந்தமாக அணிகளை வைத்திருக்கும் வேளையில் தற்போது IPL அணியை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அதானி குழுமம் ஒரு பார்மா நிறுவனத்துடன் டீல் பேசியுள்ளார்.

IPL அணிகளில் வட மாநில கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ரசிகர்களைக் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றி அதன் கட்டுப்பாட்டு உரிமையைப் பெற்ற, தனியார் ஈக்விட்டி நிறுவனமான CVC கேபிடல் பார்ட்னர்ஸ் உடன் அதானி குழுமம் மற்றும் டோரென்ட் பார்மா ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் CVC நிறுவனம் ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தான் வைத்துள்ள பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்யத் தயாராக இருந்தாலும், தொடர்ந்து சிறிய அளவிலான பங்குகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. இதேவேளையில் இந்த பங்குகளுக்கான மதிப்பீட்டை இரு தரப்பில் இருந்தும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் கௌதம் அதானியின் சொந்த ஊர்காரரும், தொழில்துறையிலும், பணக்காரர்கள் பட்டியலிலும் சக போட்டியாளராக இருக்கும் முகேஷ் அம்பானி மும்பை இந்தியன்ஸ் என்ற மாபெரும் அணியை வைத்துள்ளார். அதானி குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குவது மூலம் கிரிக்கெட்டிலும் இவர்கள் போட்டிப்போட உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட அணிகள், தங்கள் பங்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்வதை தடுக்கும் Lock-in காலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2025 பிப்ரவரியில் முடிவடையவுள்ளது. இதை தொடர்ந்து CVC நிறுவனம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இந்த பேச்சுவார்த்தை முடிந்தாலும், பிப்ரவரி 2025ல் தான் ஒப்பந்தம் நடக்கும்.
குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இந்த அணி சுமார் 1 பில்லியன் முதல் 1.5 பில்லியன் டாலர் வரை மதிப்புடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், சுமார் 5,625 கோடி ரூபாய் கொடுத்து இந்த அணியை CVC நிறுவனம் வாங்கியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான ஹவுலிஹான் லோக்கி, ஐபிஎல் தொடரின் மதிப்பை 16.4 பில்லியன் டாலராக மதிப்பீடு செய்துள்ளது.
தற்போது அதானி குழுமத்துடன் இணைந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்கும் டொரண்ட் குழுமத்திற்கு கிரிக்கெட் அணியில் முதலீடு செய்வது புதியது. ஆனால் அதானி குழுமம் ஏற்கனவே மகளிர் பிரீமியர் லீக் (WPL) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட இண்டர்நேஷனல் லீக் டி20 ஆகியவற்றில் அணிகளை வாங்கியதன் மூலம் கிரிக்கெட்டில் முதலீடு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், அதானி குழுமம் 1,289 கோடி ரூபாய் தொகைக்கு WPL ன் அகமதாபாத் அணியை கைப்பற்றியது.
உலகளவில் 193 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் CVC நிறுவனம், லாலிகா, பிரீமியர்ஷிப் ரக்பி, வாலிபால் வேர்ல்டு மற்றும் மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் பிரபலமான அணிகளில் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications