டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தாலும் அவர் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் கிங்மேக்கர் என்றால் மிகையில்லை. டிரம்ப் அமெரிக்காவில் மட்டுமல்லாம் இந்தியாவில் சில ஆடம்பர ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
இந்தியாவில் சுமார் 5 டிரம்ப் டவர்கள் உள்ளது, இது அனைத்தும் வட மாநிலத்தில் மட்டுமே உள்ளது, தென்னிந்திய மாநிலத்தில் இதுவரையில் ஒரு திட்டத்தை கூட டிரம்ப் செயல்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமாக தான் உள்ளது.
குர்கானில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது டிரம்ப் டவர்ஸ் திட்டமான டிரம்ப் ரெசிடன்ஸஸ் (Trump Residences), துவக்க நாளிலேயே முழுமையாக விற்பனையாகியுள்ளதாக ஸ்மார்ட்வேர்ல்ட் டெவலப்பர்ஸ் மற்றும் டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், டிரம்ப் சரியாக திட்டமிட்டு டிரம்ப் ரெசிடன்ஸஸ் விற்பனையை துவங்கியுள்ளார்.
டிரம்ப் ரெசிடன்ஸஸ் திட்டத்தில் 298 அதி-பிரம்மாண்ட வீடுகளைக் கொண்டுள்ளது, இந்த வீடுகள் அனைத்தும் விற்பனைக்காக அறிமுகம் செய்த நாளிலேயே முழுமையாக விற்கப்பட்டு சுமார் ரூ.3,250 கோடி மதிப்பிலான தொகையை வசூலிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் ரெசிடென்ஸஸ் குர்கான் சுமார் 51 மாடி கட்டிடமாகும். இதில் இருக்கும் அப்பார்ட்மெனட் வீடுகளின் மதிப்பு 8 முதல் 15 கோடி ரூபாய், இதுவே பென்ட்ஹவுஸ் என்றால் 125 கோடி ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மெகா திட்டம் ஸ்மார்ட்வேர்ல்ட், டிரிபெகா, மற்றும் டிரம்ப் ஆர்கனைசேஷன் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக உருவாக்கி வருகின்றன.
இதில் ஸ்மார்ட்வேர்ல்ட் நிறுவனம், கட்டுமானம், வளர்ச்சி, மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை கவனிக்கிறது, அதே சமயம் இந்தியாவில் டிரம்ப் பிராண்டின் பிரதிநிதியான டிரிபெகா நிறுவனம் இத்திட்டத்தின் வடிவமைப்பு, மார்கெட்டிங், விற்பனை, மற்றும் தர உறுதிப்பாட்டை மேற்பார்வையிடுகிறது.

2018-ல் துவங்கப்பட்ட முதல் டிரம்ப் டவர்ஸ் டெல்லி NCR திட்டம் முழுமையாக விற்கப்பட்டு, இந்த மாதம் வீட்டை வாங்கியவர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் டிரிபெகா நிறுவனம் 2வது டிவர் அறிமுகத்தின் போது தெரிவித்துள்ளது. தற்போது, இரண்டாவது டிரம்ப் டவர்ஸ் திட்டமும் துவக்க நாளிலேயே முழு விற்பனையை அடைந்து மூலம் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் டிரம்ப் பிராண்டின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
தற்போது, இந்தியாவில் மும்பை, புனே, குர்கான் (2), மற்றும் கொல்கத்தா என மொத்தம் ஐந்து டிரம்ப் பிராண்டட் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. டிரிபெகா டெவலப்பர்ஸ், கடந்த 13 ஆண்டுகளாக டிரம்ப் ஆர்கனைசேஷனுடன் இணைந்து இந்தியாவில் பணியாற்றி வருகிறது.
டிரிபெகாவின் நிறுவனர் கல்பேஷ் மேத்தா, டிரம்ப் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் வார்டன் பள்ளியில் பயின்றவர். இந்த நீண்டகால நட்பு தான் , இந்தியாவில் டிரம்ப் பிராண்டின் ஆஸ்தான பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட முக்கிய காரணமாக உள்ளது.
டிரம்ப் ரெசிடென்ஸஸ் குர்கானின் வெற்றி, இந்தியாவில் பிராண்டட் உயர்ரக வீடுகளுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. இந்திய பணக்காரர்கள், உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை அனுபவத்தை விரும்புவதால், டிரம்ப் பிராண்ட் போன்ற உயர்ரக திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன.
இந்த திட்டங்கள், இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையை உலகளாவிய அளவில் மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கின்றன. டிரம்ப் டவர்ஸ் திட்டங்கள், இந்தியாவில் உயர்ரக வாழ்க்கையின் புதிய அடையாளமாக உருவாகியுள்ளன.


Click it and Unblock the Notifications