குருகிராம்: இந்தியாவில் ரேபிடோ ,ஓலா , ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கார் மற்றும் ஆட்டோ மட்டுமில்லாமல் பைக் டாக்ஸி சேவைகளையும் வழங்கி வருகின்றன. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு எல்லாம் பைக் டாக்ஸி சேவை வரபிரசாதமாக அமைந்துள்ளது.
பைக் டாக்ஸி கட்டணம் ஆட்டோவை விட குறைவாக இருக்கும் என்பதால் பலரின் விருப்பமான சேவையாக இது இருக்கிறது. இந்நிலையில் டெல்லி அடுத்த குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் வித்தியாசமான காரணத்திற்காக ரேபிடோவில் பைக் டாக்ஸி புக் செய்து பயன்படுத்தி இருக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பைக், கார் உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்களுக்கு திடீரென தங்களுடைய வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து போவது எப்பொழுதாவது ஒருமுறை நடக்கும். அப்படி குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய ராயல் என்பீல்ட் வாகனத்தில் வெளியே சென்று இருக்கிறார். வீட்டிலிருந்து நீண்ட தொலைவில் சென்று கொண்டிருந்த போது அவருடைய பைக் திடீரென நின்று விட்டது.
பரிசோதனை செய்து பார்த்ததில் ராயல் என்பீல்டு வாகனம் பெட்ரோல் தீர்ந்ததால் நின்று இருப்பதை கண்டறிந்தார். இரவு நேரம் பெட்ரோல் பங்க் தூரமாக இருக்கிறது, வீடோ அதை விட தூரமாக இருக்கிறது. அவ்வளவு தூரம் வண்டியை தள்ளி செல்ல முடியாது என்பதால் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது தான் அவருக்கு புதிய யோசனை பிறந்தது.

தன்னுடைய போனில் ரேபிடோவில் பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். பைக் டாக்ஸி ஓட்டுநர் அங்கே வந்து பார்த்த போது ஆச்சர்யப்பட்டுள்ளார். ராயல் என்ஃபீல்டு வாகனத்துடன் நிற்கிறாரே இவர் எதற்கு பைக் டாக்ஸி புக் செய்தார் என வியந்து அவரிடம் கேட்டுள்ளார். அந்த இளைஞர் என் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது, நான் வண்டியை இழுத்து செல்வதற்காக ரேபிடோ புக் செய்தேன் என கூறுகிறார்.
பின்னர் ரேபிடோ பைக் டாக்ஸி உதவியோடு ராயல் என்ஃபீல்டை tow செய்கின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றிருக்கிறது. பைக் டாக்ஸியை இப்படி கூட பயன்படுத்தலாமா என பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். சிலர் அந்த இளைஞரின் சாமர்த்தியத்தை பாராட்டியுள்ளனர்.
கர்நாடகாவில் மாநில அரசு பைக் டாக்ஸிக்கு தடை விதித்தது, இதனை அடுத்து இளைஞர்கள் தங்களையே பார்சலாக புக் செய்து பைக் டாக்ஸியை பயன்படுத்தினர், அதனை நினைவு கூறும் வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications