அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஹெச்1பி நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஐடி நிபுணர்கள் அதிகம் பயன்படுத்துவது ஹெச்1பி விசா தான்.
அண்மையில் தான் டிரம்ப் அரசு ஹெச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலர்களாக உயர்த்தியது. இது தவிர புதிதாக விசா வேண்டி விண்ணப்பம் செய்யக்கூடியவர்களின் சமூக வலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு ஃபேக்ட் செக்கிங் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றால் அவர்களின் விசா விண்ணப்பங்களை ரத்து செய்ய செய்யலாம் என தூதரக அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது .

இத்தகைய சூழலில் ஹெச்1பி விசா பெற்று தாயகம் சென்று இருக்கக்கூடிய நபர்கள் அந்தந்த நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர் . இவர்களுக்கான விசா ரீ ஸ்டாம்பிங் செய்வதற்கு ஒரு ஆண்டு கூட தாமதமாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் ஹெச்1பி விசா ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என கூகுள் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்த சூழலில் தான் இந்தியாவிற்கு வருகை தந்த ஏராளமான ஹெச்1பி விசாதாரர்கள் தங்களுடைய விசா திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் . ஒரு நபர் தனக்கு வந்த மின்னஞ்சலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில் தன்னுடைய தந்தையின் உடல்நல பாதிப்பு காரணமாக நவம்பர் 2ஆம் தேதி அவசரமாக தான் இந்தியாவிற்கு வருகை தந்ததாகவும் டிசம்பர் 23ஆம் தேதி தான் அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி திடீரென தனக்கு தன்னுடைய விசா ரத்து செய்யப்பட்டதாக மின்னஞ்சல் வந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.ஒருவேளை அவர் மீண்டும் அமெரிக்கா வந்து பணிபுரிய வேண்டும் என்றால் புதிதாக விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம்.
கொல்கத்தாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்த நபருக்கு அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது . அதில் உங்களுடைய அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கிறது . இப்போது உங்கள் கைவசம் இருக்கும் விசாவைக் கொண்டு உங்களால் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது ஒருவேளை நீங்கள் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் மீண்டும் விண்ணப்பம் செய்யுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையை எப்படி கையாள்வது என தெரியாமல் அந்த நபர் தவித்து வருவதாக கூறியிருக்கிறார். தன்னுடைய வேலையும் பறி போய்விட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்களுக்கே விசா அப்பாயிண்ட்மெண்ட் தேதி வழங்கப்படவில்லை. ரீ ஸ்டாம்பிங் செய்ய வேண்டிய நபர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வெளிநாடு சென்றவர்களின் விசாக்களை ரத்து செய்வது இந்திய டெக்கிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications