இந்தியாவில் இருக்கும் 10ல் 9 ஐடி ஊழியர்களின் வாழ்நாள் லட்சியம் என்பது அமெரிக்காவுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் கிரீன் கார்டு வாங்கிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்பது தான்.
இதற்கான முதல் படி ஹெச்1பி விசா பெறுவது தான், பல நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி பணியாற்ற வைக்க அவர்கள் பெயரில் ஹெச்1பி விசா விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. இதற்கான முதல் கட்ட பதிவு பணிகள் மார்ச் 22 ஆம் தேதி முடிய உள்ளது, இந்த விசா தேர்வு முடிவுகள் பல ஆயிரம் ஐடி ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றப்போகிறது.

அமெரிக்க அரசின் கட்டப்பாட்டில் இயங்கும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025 நிதியாண்டுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான H-1B விசாக்களுக்கான ஆரம்ப பதிவு காலம் மார்ச் 22 ஆம் தேதி பகல் 12 மணிக்கு (EST) முடிவடைகிறது.
இந்த காலகட்டத்திற்குள், விசா விண்ணப்பதாரர்களும் அவர்களின் சட்ட பிரதிநிதிகளும், USCIS தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிக்கான பதிவு கட்டணத்தைச் செலுத்த USCIS அமைப்பின் ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி-க்கு பின்பு விண்ணப்ப எண்ணிக்கை H1B cap limit-க்கு அதிகமாகக் குவிந்தால், லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும் காரணத்தால் இந்த ஆண்டும் லாட்டரி முறை கொண்டுவரப்படும்.

இந்த லாட்டரி முறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையாக USCIS தெரிவிக்கும், இந்த அறிவிப்புகள் மார்ச் 31க்குள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் H-1B லாட்டரியில் தேர்வானவர்கள் விசா நேர்முகத் தேர்வுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பணிகள் துவங்கும். இதனால் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்தியாவில் பல ஆயிரம் ஐடி ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் முடிவுகள் வரும்.
நீங்களும் ஹெச்1பி விசா விண்ணப்பித்துள்ளீர்கள் எனில் லாட்டரியில் தேர்வாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications