டெல்லி: இந்திய ராணுவத்திற்கு 156 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
இதன்படி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 156 Light Combat ரக ஹெலிகாப்டர்களான பிரச்சாந்த் (Prachand) என பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திடம் இதே விமானத்திற்கு அரசு ஒப்பந்தம் செய்தது. தற்போது கூடுதலாக 156 பிரச்சாந்த் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 156 ஹெலிகாப்டர்களில் 90 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திற்கும், 60 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. இந்த ரக ஹெலிகாப்டர்களை பொறுத்தவரை இவை Light Combat என்ற பிரிவில் வரையறுக்கப்படுகின்றன. இவை 5000 முதல் 16,400 அடி அளவிலான உயரத்திலிருந்து லேண்டிங் மற்றும் டேக் ஆஃப் செய்யும் திறன் கொண்டவை ஆகும்.
வானில் இருந்து நிலத்திலும், வானில் இருந்து நேரடியாக வானில் இருக்கும் இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை இந்த ஹெலிகாப்டர்கள். மேலும் இந்த ஹெலிகாப்டர்களில் டேட்டா சிப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு குழுவினரோடு ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன் கொண்டதாக இந்த ஹெலிகாப்டர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு தான் இந்த பிரசாந்த் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டில் மட்டும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆர்டர் இது.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் செயல்படும் பெங்களூரு மற்றும் தும்கூர் ஆலைகளில் இருந்து இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்திய விமான படையில் 10 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன , இந்திய ராணுவத்தில் 5 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன .
2 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது, 51 அடி மற்றும் 10 அங்குல நீளம் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் 5 , 800 கிலோ எடையுடன் இதனால் டேக் ஆஃப் செய்ய முடியும். 1750 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இது சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications