தி சாட்டர்ஜி குழுமம் (TCG) என்னும் தனியார் பங்கு முதலீடு நிறுவனம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் தான் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (HPL). இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் மெகா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் அதாவது 83000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து பெட்ரோ கெமிக்கல் துறையில் வர்த்தகத்தை துவங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக HPL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

எத்திலீன் மற்றும் புரோபிலீன்: தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான தி சாட்டர்ஜி குழுமம், 2028-2029 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் கடலூரில் ஆண்டுக்கு 3.5 மில்லியன் மெட்ரிக் டன் எத்திலீன் மற்றும் புரோபிலீன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆயில் டூ கெமிக்கல் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ஹால்டியா CEO திரு. நவநீத நாராயண் திங்கட்கிழமை தெரிவித்தார்.
பயன்பாடு: எத்திலீன் மற்றும் புரோபிலீன் மூலம் ஷாப்பிங் பேக், கார் பாகங்கள், தண்ணீர் குழாய்கள் தயாரிக்க முடியும். மேலும், இந்த மெகா திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிதி ஒதுக்கீடு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு Vs குஜராத்: குஜராத் மாநிலத்தின் வரி, வர்த்தகம், ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல் துறை வர்த்தகம் தான். கிட்டத்தட்ட இதே வாய்ப்பை தமிழ்நாடு தி சாட்டர்ஜி குழுமம் வாயிலாகப் பெற உள்ளது.
ஹால்டியா தொழிற்சாலை: ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் கிழக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட பெட்ரோ கெமிக்கல் ஆலையைக் கொண்டுள்ளதுடன், தற்போது ஹால்டியா என்னும் பகுதியில் நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஃபீனால் (Phenol) தயாரிப்பு தொழிற்சாலையைக் கட்டமைத்து வருகிறது.
ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் என்டரி: 2021 ஆம் ஆண்டில், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கடலூரில் உள்ள நாகர்ஜூனா ஆயில் நிறுவனத்தின் செயலிழந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையைக் கையகப்படுத்தியது. இந்த தொழிற்சாலை ஒரு நாளைக்கு 120,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாக இருந்தது.
தேவை அதிகரிப்பு: இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால், பிளாஸ்டிக் பொருட்கள் முதல் பெயிண்ட் வரை பல்வேறு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், மோனோஎத்திலீன் கிளைக்கால் (Monoethylene Glycol) போன்ற வேதிப்பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மோனோஎத்திலீன் கிளைக்கால் என்பது டெக்ஸ்டைல் ஃபைபர் மற்றும் பாலியஸ்டர் ரெசின்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
தென்னிந்தியாவின் தேவை: இந்தியாவின் மேற்கு பகுதியில் ஏற்கனவே பல பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யப் பெரிய பெட்ரோ கெமிக்கல் திட்டம் இல்லை என்று ஹால்டியா CEO திரு. நவநீத நாராயண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டம் தென்னிந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் மற்றும் இறக்குமதியைக் குறைத்து, வேதிப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
எதிர்காலம்: ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இந்த திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், தென்னிந்தியாவில் வேதிப்பொருட்கள் உற்பத்தியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும்.
இது இந்தியாவின் தற்சார்பு திட்டமான Atmanirbhar Bharat திட்டத்திற்கு முக்கிய ஏணிப் படியாக அமையும். மேலும், இந்த திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications