டெக் மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் செயற்கை நுண்ணறிவு பெரும் ஆதிக்கத்தை பெற்று இருக்கும் வேளையில், இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏஐ துறையில் கலக்கி வருகிறது. இதில் ஒரு கூட்டணி தற்போது 98 மொழிகளில் இயங்கும் ஒரு ஏஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதற்கு ஆதாரமாக, 3AI Holding Limited மற்றும் SML இந்தியா நிறுவனங்கள் இணைந்து, 'ஹனுமான்' என்ற பன்மொழி செயற்கை நுண்ணறிவு (GenAI) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான தளம் உலகளவில் 98 மொழிகளில் இயங்கும் திறன் கொண்டது, இதில் இந்தியாவின் 12 மொழிகளும் அடங்கும்.

'Hanooman' செயற்கை நுண்ணறிவு தளத்தை அனைத்து பயனர்களும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது, இந்த செயற்கை நுண்ணறிவு கருவி, டெக்ஸ்ட் வடிவிலான பதில்களை உருவாக்குவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
ஹனுமான் செயற்கை நுண்ணறிவு தளத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து மட்டும் டிரைனிங் செய்யப்பட்டு உள்ளதால் இதற்கு முந்தைய அல்லது வரலாற்று தகவல்களை சரியான முறையில் அளிக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், இந்த செயற்கை நுண்ணறிவு மாடலின் 'ப்ரோ' பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த தளம் அதன் முதல் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனர்களைச் சென்றடைய இலக்கு வைத்துள்ளது. இந்த முயற்சியில், SML இந்தியா நிறுவனம் HP, NASSCOM மற்றும் Yotta நிறுவனங்களுடன் இணைந்து இயங்கியுள்ளது. Yotta நிறுவனம் GPU கிளவுட் உள்கட்டமைப்பை வழங்கும், அதே நேரத்தில் NASSCOM உடனான கூட்டணியானது AI ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதையும் 3000 கல்லூரிகளுடன் இணைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ஹனுமான் தளத்தை உருவாக்கிய கூட்டணி.
தற்போது இந்த தளம் 12 இந்திய மொழிகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளில் மக்கள் பயன்படுத்த முடியும். 3AI Holding நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த தளம், தெளிவான மற்றும் தகவல் நிறைந்த பதில்களை வழங்கவும், சிக்கலான தரவுகளை செயல்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமாக அமைப்பை கொண்டு உள்ளது.
ஹனுமான் செயற்கை நுண்ணறிவு தளம், சுகாதாரம், நிர்வாகம், நிதி சேவைகள் மற்றும் கல்வி துறைகளுக்கு சேவையளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. 3AI Holding நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அர்ஜுன் பிரசாத் அவர்கள், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் பணி என்று கூறினார்.


Click it and Unblock the Notifications