காஸியாபாத்: சக ஊழியர்களின் செயலால் 27 வயதான வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவானி குப்தா காஸியாபாத் பகுதியை சேர்ந்தவர். இவர் நொய்டா பகுதியில் இருக்கக்கூடிய ஆக்சிஸ் வங்கிக் கிளையின் ஆக்சிஸ் ஹவுஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தனியார் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பயின்றவர் ஷிவானி. ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் இவர் நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் ஹவுஸ் அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவர் தன்னுடைய வீட்டில் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு காரணமாக சக ஊழியர்கள் ஆறு பேரின் பெயரை அவர் குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இது தொடர்பாக சிவானியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட பிரிவுகளில் இந்த ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ஷிவானியுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் கடந்த ஆறு மாதங்களாக அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பப்படுத்தியுள்ளனர். குரங்கு, பைத்தியம் என கூறுவது, மோசமாக விமர்சனம் செய்வது என இவர்களின் செயல்களால் ஷிவானி கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய மேலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மாறாக ஷிவானி மீதே குற்றம்சாட்டி வேலையை ராஜினாமா செய்யும்படி கூறியுள்ளனர்.
மேலும் அலுவலகத்திலேயே இவரை தனிமைப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இவர் மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற்றிருக்கிறார். தன்னுடைய சக ஊழியர்கள் தன்னை கிண்டல் செய்யும் போதெல்லாம் தனக்கு கை கால்கள் அனைத்தும் நடுங்க தொடங்கிவிடும் என அவர் தன்னுடைய தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண் ஊழியர் தன்னை அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தான் வேலையை விடுவதாக கூறிய போது மறுப்பு தெரிவித்து விட்டு அவர்களே தன்னை வேலையை விட்டு அனுப்புவதை போல ஈமெயில் அனுப்பியுள்ளனர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்ற சக ஊழியர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர். இதனிடையே ஷிவானியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆக்சிஸ் வங்கி நிறுவனம், மோசமான பணி கலாசாரத்தை நாங்கள் ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை என கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications