ஈரான் போர் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு அண்டை நாடுகளும் பல மடங்கு பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய சூழலில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் ,டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் பெட்ரோல் , டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் முடிந்த அளவு பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் முடிந்த அளவு மக்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பள்ளிகள் கூட ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற வேண்டும் என்றும் கொரோனா காலத்தை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மக்கள் திரும்பினால் நாட்டில் பாதகமான விளைவுகள் ஏற்படுவது குறையும் என பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். மேலும் பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்திருந்தார்.
இதனால் இந்தியாவின் கொரோனா காலத்தைப் போல லாக்டவுன் போடப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. சமூக வலைத்தளங்கள் எங்கும் அடுத்து லாக்டவுன் வருகிறதா என பலரும் விவாதித்து வரக்கூடிய சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, மேற்காசிய மோதல்களால் இந்திய நிதி நிலைமை பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்ததாக தெரிவித்தார்.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி என்பது 35,000 டன்களாக இருந்தது அது தற்போது ஒரு நாளைக்கு 54,000 டன்கள் என உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். நாட்டின் எந்த பகுதியிலுமே எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டு இருக்கும் அவர் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவே இல்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்காக விலை உயர போகிறது என நான் கூறவில்லை ஆனால் பெட்ரோல் டீசல் விலைகளுக்கும் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது, அதேபோல 45 நாட்களுக்கு தேவையான lpg கையிருப்பு இருக்கிறது என்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திப்பதாக குறிப்பிட்ட அவர் கடந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் பெற்ற லாபம் அனைத்துமே இந்த இரண்டு மாதங்களிலேயே காணாமல் போய்விட்டது என குறிப்பிட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் நாம் சிக்கனமாக இருக்க வேண்டி இருக்கும் என்பதை தான் முன்கூட்டியே தெரிவித்திருப்பதாக கூறும் அமைச்சர் எவ்வளவு நாட்கள் தான் எண்ணெய் நிறுவனங்களால் இந்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என கூறியிருக்கிறார்.
இந்திய பொத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலைக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வாங்கி குறைந்த விலைக்கு அவற்றை மக்களுக்கு விற்பனை செய்கின்றன, இதனால் நஷ்டம் வருகிறது அதனை எத்தனை காலம் அவற்றால் தாங்கி கொள்ள முடியும் என தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

