வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் நம் வாழ்க்கையில் நிம்மதி பெருகும். இந்த நிலையில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இரண்டு சூத்திரங்களை சொல்கிறார் ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் பேராசிரியர் கௌதம் முகுந்தா.
அவரது லீடர்ஷிப் ஃபில்ட்ரேஷன் தியரிப்புபடி எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு தலைவர் எப்படி செயலாற்றுவார் என்று நிறுவனங்கள் எப்படி ஆட்களைத் தேர்வு செய்கின்றன என்பதை விளக்குகிறது.

வெற்றி இலக்கை அடையவேண்டுமென்றால் கீழ்கண்ட இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொண்டால் போதும் என்று பேராசிரியர் முகுந்தா கூறுகிறார்.
அந்தக் கேள்விகள்-
1. உங்களது முதன்மையான பலங்கள் என்ன?
இந்தக் கேள்வியைப் பார்த்தால் உங்களிடம் ஒளிந்துள்ள திறன்களை அடையாளம் கண்டுகொண்டு அதை உங்களது வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லப் பயன்படுத்தலாம்.
2. உங்களால் முடியும் என்று நிறுவனங்கள் எப்படி முடிவெடுக்கின்றன?
இந்தக் கேள்விக்கான சரியான பதிலானது நீங்கள் சரியான இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி நடந்து உங்கள் வளர்ச்சி, கற்றுத்திறன், தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மேம்படுவதற்கு உதவும்.
இந்த இரண்டு கேள்விகளையும் ஒரே நேரத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டீர்களானால் நீங்கள் எப்படிப்பட்டவர், இந்த உலகுக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள எந்தத் திறமை வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் உங்களது இலக்கை நீங்கள் அடைவதற்கு எந்தெந்த பண்புகள் எல்லாம் தேவை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இவைதான் உங்களது வெற்றிக்கான மந்திரங்கள். உங்களால் எதை சிறப்பாகச் செய்ய முடியும். அதை எப்படிப்பட்ட சூழல்களில் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்கிறார் முகுந்தா.
பிரபல ஒலிம்பிக் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெலப்ஸ் தனது சாதனையைப் படைக்க எப்படிப்பட்ட கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று சுட்டிக் காட்டுகிறார் முகுந்தா.
மைக்கல் ஃபெளப்ஸ் தனது உயரம் மற்றும் உடல் வலிமைதான் சாதனைக்கான அடிப்படை என்று உணர்ந்து கொண்டு அதற்கேற்ப நீச்சல் விளையாட்டை ஃபெளப்ஸ் தேர்வு செய்தார். பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று குவித்தார். மாறாக அவர் ஓட்டப்பந்தயத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் இந்தளவு சாதித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் முகுந்தா.
இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டும் அறிந்து கொண்டால் போதாது. அதன்படி அயராத உழைப்பு, மற்றவர்களிடம் சரியான கருத்துப் பரிமாற்றம், எந்த விஷயத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் உறுதி, உணர்ச்சிவயப்படாமல் முடிவெடுத்தல், செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார் முகுந்தா.
இதன் அடிப்படையில் உங்களது போக்கு அமைந்தால் நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்தான்.


Click it and Unblock the Notifications