மனதிற்கு பிடித்ததைச் செய்ய வேண்டும். ஆனால் செய்யும் தொழிலில் நல்ல லாபமும் கிடைக்க வேண்டும். இதுதான் இன்றைய தொழில் முனைவோரின் கனவு. அப்படி இருக்கையில் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்றிருந்த ஒருவர், மன நிம்மதியோடு பிடித்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? அரசாங்க வேலையில் அவருக்கு கிடைக்காத வருமானம், சுய தொழிலில் கிடைக்கிறது. எவ்வளவு என்று தெரிந்தால் தலை சுற்றி விடும். ஒவ்வொரு நாளும் ரூ.90,000-த்திற்கும் மேல் வருமானம் பார்த்து வருகிறார்.
அவர் அப்படி என்ன வேலை செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது?என்பதைப் பார்ப்போம். சிலர் தங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். அப்படித்தான் நிர்மல் சிங்கும் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.
கர்னல் மாவட்டத்தில் பரானா கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மல். இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டில் தனது அரசு பணியை ரிசைன் செய்தார். அவருக்கு நீண்ட நாட்களாகவே சொந்தமாக பால் பண்ணை வைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. மக்களுக்கு மார்க்கெட்களில் கிடைக்கும் பாலை போலன்றி தூய்மையான பாலை வழங்க வேண்டும் என்பதற்காகவே அதிநவீன வசதிகளுடன் கூடிய பால் பண்ணையை தொடங்கினார்.

நிர்மல் அமைத்த பால் பண்ணையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பசுவிற்கும் பிரத்யேகமாக "ஸ்மார்ட் காலர் டேக்" பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேக் பசுவின் உடல்நலம் எப்படி இருக்கிறது? அதன் அசைவுகள் நன்றாக இருக்கிறதா? அது உண்ணும் உணவு மற்றும் அருந்தும் நீரின் அளவு சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்கிறது.
இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட டேக் என்பதால் நிர்மல் எங்கு வெளியூர் சென்றாலும் பசுவின் உடல்நலம் குறித்த தகவல்களை அவருடைய ஸ்மார்ட் போனிலேயே பார்க்க முடியும். ஒரு வேளை பசுவிற்கு உடல் நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டால் உடனே அவருக்கு ஒரு அப்ளிகேஷன் மூலமாக எச்சரிக்கை அனுப்பப்படும். இதை வைத்து தேவைப்படும் சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்கிவிடுவார். இப்படி பசுக்களை பராமரிப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு பாலின் தரம் மற்றும் அதில் உள்ள கொழுப்பு சத்தை அதிகரிப்பதற்காக பசுக்களுக்கு சைலேஜ் மற்றும் கலப்பு தீவனங்கள் வழங்கப்படுகின்றன.
அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் பசுக்கள் நீர் சத்துடன் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்றுகளுக்கு தனியாகவும், பசுக்களுக்கு தனியாகவும் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன. பசுக்களை கண்காணிக்க இரண்டு கால்நடை மருத்துவர்களும், 8 பணியாளர்களும் 24 மணி நேரமும் பால் பண்ணையில் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் பிற தொழில் முனைவோரை போல நிர்மலுக்கும் அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஒரு சில பசுக்களுடன் தனது பண்ணையை தொடங்கினார். ஆனால் தற்போது அவருடைய பண்ணையில் 150 பசுக்கள் இருக்கிறது. வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த பசுக்களின் எண்ணிக்கை 400-ஆக அதிகரிக்க நிர்மல் இலக்கு வைத்துள்ளார்.
பால் உற்பத்தி: இவருடைய பால் பண்ணையில் இருந்து ஒரு நாளைக்கு 1850 லிட்டர் வரை பால் கிடைக்கிறது. இதில் அதிகபட்சமாக 2,400 லிட்டர் வரை கிடைக்கும். தினசரி பால் விற்பனையை பொறுத்து நிர்மல் தினமும் ரூ.80,000 முதல் ரூ.90,000 ஆயிரம் வரை வருமானம் பார்த்து வருகிறார். நிர்மல் பண்ணையில் இருக்கும் ஒரு சில பசுக்கள் தினசரி அடிப்படையில் 67 லிட்டர் வரை பால் தருகிறதாம்.
தாங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலும், அதிலேயே இருந்து கொண்டு வேலையை தொடரவும் மனசில்லாமல்.. வேறு வேலைக்கு செல்லவும் மனசில்லாமல்.. தயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கு நிர்மலின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.பிடித்த தொழிலை, சிறந்த திட்டமிடலுடன் மார்க்கெட்டில் இருக்கும் தேவையை அறிந்து செய்தால் இது போன்ற வருமானம் அனைவருக்கும் சாத்தியமே!


Click it and Unblock the Notifications