சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம் மூலமாக பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை: நீண்ட காலம் இதற்காக காத்திருந்த பெண்கள் பலரும் ஆர்வத்தோடு வந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமை தொகையை கேட்டு விண்ணப்பம் செய்துவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,சமூக நலத்துறை ,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறுபான்மையினர் துறை , வருவாய்த்துறை என 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சேவைகளை மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இந்த முகாம்கள் வாயிலாகவே பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பெரும்பாலான சேவைகளை மக்கள் இந்த முகாம்களுக்கு சென்றால் ஒரே நாளில் முடித்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கிவருகிறது. இந்த திட்டத்தில் புதிதாக சேர எண்ணுபவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 நாட்களில் முடிவு: இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகையை கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றனர் . அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் இந்த விண்ணப்பங்கள் மீதான முடிவு தெரிந்துவிடும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் நாள் முகாமில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கெல்லாம் 45 நாட்கள் கழித்து அதாவது இந்த மாத இறுதிக்குள் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிய வந்து விடும்.

என்னென்ன ஆவணங்கள்: பெண்கள் தங்களுடைய குடும்ப அட்டை ,வங்கிக் கணக்கு புத்தகம் ,ஆதார் எண் மற்றும் வீட்டின் மின்கட்டண ரசீது ஆகிய ஆவணங்களோடு தங்கள் வீட்டுக்கு அருகே நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். நிறைய பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம் செய்வதால் அரசு மிக கவனமாக இவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்துதான் விண்ணப்பத்தை ஏற்கும் என சொல்லப்படுகிறது. அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்துதான் விண்ணப்பத்தின் மீது முடிவெடுப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது முடிவு தெரியும்?: மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக மகளிர் உரிமை தொகையை கேட்டு மட்டும் சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதல் நாள் விண்ணப்பம் செய்தவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா ஆயிரம் ரூபாய் பணம் வருமா என்பது குறித்த விவரம் தெரிய வந்துவிடும். அடுத்தடுத்த நாட்களில் முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications