இந்திய ஆட்டோமொபைல் துறை லாக்டவுன் காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்த காரணத்தால் கடந்த 7 மாதமாகத் தள்ளுபடி, விலை குறைப்பு எனப் பலவற்றை அறிவித்துக் கார் மற்றும் பைக் விற்பனையை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியா 2020-21 நிதியாண்டில் ஆட்டோமொபைல் சந்தையின் உற்பத்தி வெறும் 3 சதவீத சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.
ஆனால் மே மாதம் முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு எனப் பல காரணங்களால் கார் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதேவேளையில் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் இன்னொரு பிரச்சனை வெடித்தது.
கார் உற்பத்தி
இன்று இந்தியா மட்டும் அல்லாமல் ஜப்பான், சீனா, கொரியா உட்பட உலகின் அனைத்து முன்னணி நாடுகளில் கார் உற்பத்திக்குத் தேவையான முக்கியச் சிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தால் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
டாப் வேரியன்ட் கார்
பொதுவாக அனைத்து டாப் வேரியன்ட் கார்களிலும் பல்வேறு எலக்ட்ரானிக் சேவைகளைப் பயன்படுத்த கம்பியூட்டர் சிப் கார்களில் பயன்படுத்தப்படும். இந்த நிலையில் சிப் தயாரிப்பதற்கான செமிகண்டாக்டர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் கார் உற்பத்தி உலகம் முழுவதும் தடை பெற்றுள்ளது.
6 மாதம் வரை காத்திருக்க வேண்டும்
இதனால் அனைத்து பிராண்டுகளிலும் டாப் வேரியன்ட் கார் புக் செய்தவர்களின் காத்திருப்புக் காலம் கூடுதலாக அதிகரித்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் டாப் வேரியன்ட் கார்களுக்கு 3 முதல் 6 மாதம் வரையிலான காலகட்டத்திற்குக் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை
இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் நேரத்தில் கார் தயாரிப்பு மற்றும் டெலிவரியில் ஏற்பட்டு உள்ள தொய்வு ஆட்டோமொபைல் சந்தையின் வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி நிறுவன அறிவிப்பு
மேலும் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் தனது உற்பத்தி அளவீட்டை 1.72 லட்சத்தில் இருந்து 1.59 லட்சமாகக் குறைத்துள்ளது. இதோடு மாருதி நிறுவனம் தனது டீலர் மற்றும் சப்ளையர்களுக்கு உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள தொய்வை விளக்கியுள்ளது.
ஹோண்டா, சுசூகி
ஏற்கனவே ஜப்பான் ஹோண்டா நிறுவனம் தனது கார் தயாரிப்பு, வர்த்தகம், லாப அளவீடுகள் சிப் தட்டுப்பாடு காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது இதே சிப் தட்டுப்பாடு காரணமாக 2021ஆம் ஆண்டின் லாப அளவீட்டை சுசூகி மோட்டார்ஸ் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications