இந்திய ஐடி துறையில் சந்தை மதிப்பீட்டு அளவில் ஏற்கனவே விப்ரோ நிறுவனத்தை முந்திய ஹெச்சிஎல் நிறுவனம், இன்று சிறப்பான காலாண்டு முடிவுகளை அறிவித்து முதலீட்டாளர்களைக் குளிர்வித்துள்ளது.
விப்ரோ லாபத்தில் 9 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் ஹெச்சிஎல் சிறப்பான லாபத்தை அறிவித்தது மட்டும் அல்லாமல் 3வது முறையாக டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் செப்டம்பர் காலாண்டில் மொத்த லாப அளவு 6 சதவீதம் அதிகரித்து 3,489 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதேபோல் வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 19.5 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து 24,686 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
10 ரூபாய் டிவிடெண்ட்
இதைவிட முக்கியமான அனைத்து ரீடைல் முதலீட்டாளர்களையும் மகிழ்விக்கும் வகையில் 2023 ஆம் நிதியாண்டில் 3வது முறையாக டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளது. இந்த முறை 2 ரூபாய் முகமதிப்புக் கொண்ட ஒரு பங்கிற்குச் சுமார் 10 ரூபாய் டிவிடெண்ட் தொகையை அளிக்க ஹெச்சிஎல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வருவாய் வளர்ச்சி விகிதம்
மேலும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கை அளிக்கும் வகையில் 2023 ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி விகிதத்தை 12-14 சதவீதத்தில் இருந்து 13.5-14.5 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. மேலும் டிவிடெண்ட் தொகை நவம்பர் 2 ஆம் தேதி முதலீட்டாளர்கள் கணக்கில் டெப்பாசிட் செய்யப்பட உள்ளது.
219,325 ஊழியர்கள்
செப்டம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சுமார் 10,339 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்த்துள்ளது. இதேவேளையில் சில ஊழியர்கள் வெளியேறிய நிலையில் மொத்த சேர்ப்பு எண்ணிக்கை 8,359 ஆக உள்ளது. மேலும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 219,325 ஆக உள்ளது.
அட்ரிஷன் விகிதம்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது, இதுவே விப்ரோ நிறுவனத்தில் 23 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ஹெச்சிஎல் டெக் பங்குகள் 1.5 சதவீதம் அதிகரித்து 953 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications