இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் இன்று தனது 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், இன்று ஹெச்சிஎல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
லாபம்: ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.4,257 கோடியாக இருந்த நிலையில், 2025 ஜூன் காலாண்டில் 10% குறைந்து ரூ.3,843 கோடியாக பதிவாகியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது, ஏற்கனவே இக்காலாண்டு முடிவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், கணிப்புக்கு ஏற்ப ஹெச்சில் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வருவாய்: ஜூன் காலாண்டில் HCL டெக்னாலஜிஸின் ஆப்ரேட்டிங் வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான ரூ.28,057 கோடியை ஒப்பிடுகையில் சுமார் 8% உயர்ந்து இந்த ஆண்டு ரூ.30,349 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு வருவாய் அளவான ரூ.30,246 கோடியுடன் ஒப்பிடுகையில், காலாண்டு அடிப்படையிலான வருவாய் 0.3% அதிகரித்துள்ளது.
ஈவுத்தொகை: ஹெச்சிஎல் நிறுவனம் மோசமான லாப அளவை பதிவு செய்துள்ள வேளையில் முதலீட்டாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 2025-26 நிதியாண்டிற்காக ஒரு பங்கிற்காக 12 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது, இது முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிய அளவிலான நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஈவுத்தொகை செலுத்துவதற்கான பதிவு தேதியாக ஜூலை 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் பணம் செலுத்தும் தேதி ஜூலை 28 ஆக அறிவித்துள்ளது.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நிலையான நாணய மதிப்பீட்டில் இந்த ஆண்டு 3% முதல் 5% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேவைத்துறை வருவாய் வளர்ச்சியும் 3% முதல் 5% வரை இருக்கும் என்று இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும், EBIT மார்ஜின் 17% முதல் 18% வரை இருக்கும் என்று நிறுவனம் கணித்துள்ளது.
ஜூன் காலாண்டு முடிவுகள் குறித்து இந்நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாதர் மால்ஹோத்ரா முதலீட்டாளர்களுக்கு கூறுகையில், நிறுவனம் AI தொழில்நுட்பத்தை அனைத்து வர்த்தகத்திலும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் மூலம் வர்த்தகம் ஊழியர்கள், நிர்வாகம் என அனைத்திலும் சாதமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த அணுகுமுறை நிறுவனத்தை தொழில்துறையில் முன்னணியில் நிறுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications