இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ன் சாப்ட்வேர் மற்றும் பிராடெக்ட் வர்த்தகப் பிரிவின் தலைவரும், நிறுவனத்தின் சீனியர் கார்பரேட் துணைத் தலைவருமான டேரன் ஓபர்ஸ்ட் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மொத்தமாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ஐ விட்டு வெளியேறியுள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வரும் காரணத்தால் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் டேரன் ஓபர்ஸ்ட் போன்ற உயர் அதிகாரியின் வெளியேற்றம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஹெச்சிஎல் டெக்லாஜிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நிர்வாக மாற்றம், ஊழியர்கள் வெளியேற்றம், சக போட்டி நிறுவனங்களை விடவும் குறைவான வர்த்தகம் பெறுவது போன்ற பல பிரச்சனைகளைக் கடந்த சில காலாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் டேரன் ஓபர்ஸ்ட் வெளியேறுவது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ஹெச்சிஎல் சாப்ட்வேர் பிரிவு
ஹெச்சிஎல் நிறுவனம் ஐடி சேவை நிறுவனமாக இருந்தாலும், நீண்ட காலமாகச் சாப்ட்வேர் பிரிவிலும் இயங்கி வருகிறது, ஹெச்சிஎல் சாப்ட்வேர் பிரிவின் தலைவராக இருந்தவர் தான் டேரன் ஓபர்ஸ்ட். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் மொத்த வருவாயில் ஹெச்சிஎல் சாப்ட்வேர் 11 முதல் 12 சதவீதம் பங்கீட்டை அளிக்கிறது.
டேரன் ஓபர்ஸ்ட்
டேரன் ஓபர்ஸ்ட் 2014ல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கார்பரேட் டெவலப்மெண்ட் தலைவராகப் பணியில் சேர்ந்தார், அதன் பின்பு 2016ல் ஹெச்சிஎல் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தேடல்
டேரன் ஓபர்ஸ்ட் வெளியேறிய நிலையில் தற்காலிகமாக நிர்வாகப் பணிகளை உயர் அதிகாரிகள் மத்தியில் பகிரப்படுவதாகவும், இப்பதவியில் புதிய நபரை தேர்வு செய்யும் பணிகளை உடனடியாகத் துவங்கவும் உள்ளதாக ஹெச்சிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டேரன் ஓபர்ஸ்ட் தலைமை வகித்த ஹெச்சிஎல் சாப்ட்வேர் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹெச்சிஎல் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகளின் விலை 0.40 சதவீதம் வரையில் சரிந்து 1,178.35 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. 2021ல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சுமார் 24.01 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதன் மூலம் மொத்த சந்தை மதிப்பு 3,19,913 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications