இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சக போட்டி நிறுவனங்களைப் போல் கடும் வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று பெருமளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இதுமட்டும் அல்லாமல் 2020ல் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் மாற்றம் அடைந்தது, இதன் மூலம் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடார்-ன் ஓரே மகளான ரோஷினி நாடார் இக்குழுமத்தின் தலைவர் ஆனார். இவரது வருகை இந்நிறுவனத்தின் ஊழியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான போன்ஸ்-ஐ அறிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் விப்ரோ நிறுவனத்துடன் போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2020ல் 10 பில்லியன் டாலர் வருவாய் பெற்று மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் உலகளவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்களுக்குப் போன்ஸ் அளிக்க முடிவு செய்துள்ளது.

700 கோடி ரூபாய் போனஸ்
இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் ஹெச்சிஎல் டெக் 10 பில்லியன் டாலர் வருவாய் சாதனையை அடையக் காரணமாக இருந்த ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் தொகையாகச் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பகிர்ந்து அளிக்க முடிவு செய்துள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம்.

1,59,682 ஊழியர்கள்
இந்தப் போனஸ் தொகை ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் முழுமையாக நிறைவடைந்த அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கும், மேலும் ஊழியர்களின் 10 நாள் சம்பளம் போன்ஸாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த 700 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 31 முடிவில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,59,682 ஆக இருந்தது.

20 வருடத்தில் சாதனை
10 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய வருவாய் இலக்கை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிட்டு வெறும் 20 வருடத்தில் அடைந்துள்ளது. இந்த இலக்கை ஊழியர்களின் கடும் உழைப்பின் வாயிலாகவே அடைய முடிந்துள்ளது என ஹெச்சிஎல் டெக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தப் போனஸ் தொகை பிப்ரவரி 2021 மாத சம்பளத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

ஹெச்சிஎல் டெக் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்சிஎல் டெக் பங்குகள் 0.63 சதவீத வளர்ச்சி அடைந்து 952.05 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவனப் பங்குகள் 692 ரூபாய் என்ற அளவில் இருந்து 1,067 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது. காலாண்டு முடிவுகள், புதிய வர்த்தகங்கள், நிர்வாக மாற்றங்கள் எனப் பல்வேறு காரணிகள் மூலம் ஹெச்சிஎல் பங்குகள் தொடர் வளர்ச்சியை அடைந்துள்ளது.