இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தங்களுடைய முதல் டெலிவரி சென்டரை கேரளாவில் நிறுவியுள்ளது.
ஒரு புராஜெக்ட்டின் ஆய்வு பணிகள் தொடங்கி அதை முழுமையாக கிளையண்ட்களிடம் ஒப்படைப்பது வரை எண்ட் - டூ- எண்ட் நடைமுறைகளை கொண்டவை தான் ஐடி நிறுவனங்களின் டெலிவரி சென்டர்கள். அந்த வகையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் கேரளாவில் தன்னுடைய டெலிவரி சென்டரை நிறுவியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இன்ஃபோ பார்க் கேம்பஸில் தான் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் டெலிவரி சென்டர் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்திலிருந்து பொறியியல் ,ஆய்வு மற்றும் மேம்பாட்டு சேவைகளும் , வாகனத்துறை ,செமி கண்டக்டர் துறை, மருத்துவத் துறை மற்றும் பிற தொழில்துறைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதலே கொச்சியில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போது தான் முதன்முறையாக தன்னுடைய டெலிவரி சென்டரை இங்கே நிறுவி இருக்கிறது. இந்த டெலிவரி சென்டரில் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 120 அனுபவம் வாய்ந்த தொழில் துறை வல்லுநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவே ஹைடெக் துறையில் கேரள மாநிலம் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது என்பதற்கு இந்த மையம் நிறுவப்பட்டிருப்பதே உதாரணம் என கூறினார்.
இந்த நவீன மையத்தில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய செமி கண்டக்டர் துறைக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனக் கூறினார். மேலும் வாகனம், மருத்துவம் மற்றும் பிற தொழில்களுக்கு தேவையான சேவைகளை இந்த மையம் வழங்கும் என்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் சம்பந்தப்பட்ட ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
திறமையான வேலையாட்கள் மற்றும் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய உள்கட்டமைப்புக்கு பெயர் போனதுதான் கேரள மாநிலம் என சுட்டிக்காட்டிய அவர், கேரள மாநிலத்தில் தங்களுடைய டெலிவரி மையத்தை நிறுவ வேண்டும் என ஹெச் சிஎல் நிறுவனம் எடுத்துள்ள முடிவும் மிகச்சிறந்த முடிவு எனக் கூறியுள்ளார். பிராந்திய ரீதியாக செமி கண்டக்டர் பிரிவில் கேரள மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைவதற்கு இந்த மையம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவில் 1,71,000 பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த நிறுவனம் 20 இடங்களில் தங்களுடைய டெலிவரி சென்டர்களை நிறுவியுள்ளது. பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் , குரு கிராம், ஹைதராபாத் ,லக்னோ, மும்பை உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனத்தின் டெலிவரி சென்டர்கள் அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications