இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். டெக் (HCL Tech), அதன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், ஒரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஊழியர்களுக்கு காலாண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த வேரியபிள் பே கொள்கையை (Quarterly Variable Pay) ரத்து செய்து, அதனை நிரந்தர சம்பளத்துடன் (Fixed Salary) இணைக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டின் நடைமுறையைப் பின்பற்றி, ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு ஊக்கத்தொகை : இந்த புதிய முடிவின்படி, ஹெச்.சி.எல் டெக்கின் அனைத்து ஊழியர்களுக்கும், காலாண்டு ஊக்கத்தொகை இனி நிலையான மாத சம்பளத்தின் ஒரு பகுதியாக இணைத்து வழங்கப்படும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.சி.எல் டெக்கின் தலைமை மக்கள் அதிகாரி ராம் சுந்தரராஜன், எங்களது காலாண்டு வேரியபிள் பே ஊதியத்தை, அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான ஊதியமாக மாற்றி, அதனை சம்பளத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

ஊக்கத்தொகையில் இரண்டு பிரிவுகள் : ஹெச்.சி.எல் டெக்கின் வேரியபிள் பே முறையில் இரண்டு முக்கியப் பிரிவுகள் இருந்தன. பெரும்பாலான திட்டங்கள் சார்ந்த ஊழியர்களுக்கு, திட்டத்தின் செயல்திறன் அளவுகோல்களை பொறுத்து இந்த ஊக்கத்தொகை காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
திட்டச் செயல்திறனுடன் இணைக்கப்பட்ட இந்த ஊக்கத்தொகைப் பகுதியைத்தான் இப்போது நிலையான ஊதியத்துடன் இந்நிறுவனம் இணைத்துள்ளது. இதன் மூலம் அது மாதந்தோறும் நிலையான சம்பளமாகவே வழங்கப்படும்.
அதேபோல், ஊழியரின் ஒட்டுமொத்தப் பணியின் அடிப்படையிலான வருடாந்திர செயல்திறன் போனஸ் வழக்கம்போல் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த மாற்றத்தால், குறிப்பாக இளம் மற்றும் புதிய ஊழியர்கள் அதிகப் பலன் பெறுவார்கள் என்றும், அவர்களின் வருமானத்தில் நிச்சயமற்ற தன்மை குறையும் என்றும் ஹெச்.சி.எல் டெக் தெரிவித்துள்ளது. அதே சமயம், மூத்த ஊழியர்களுக்கு வருடாந்திர செயல்திறன் போனஸ் தொடர்ந்து கிடைக்கும்.
அக்டோபர் முதல் சம்பள உயர்வு : சம்பள உயர்வுகள் குறித்துப் பேசிய ராம் சுந்தரராஜன், "சம்பள உயர்வை அக்டோபர் மாதம் முதல் அமலுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு நாங்கள் பயன்படுத்திய அதே நடைமுறையைப் பின்பற்றிச் சம்பள உயர்வு செயல்முறையை செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஊழியர்கள் குறித்த நேரத்தில் தங்கள் சம்பள உயர்வினைப் பெறுவார்கள்.
HCL நிறுவனம் இந்த புதிய அறிவிப்புகளை வெளியிடும் நிலையில், ஊழியர்கள் வெளியேறும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. செப்டம்பர் மாத நிலவரப்படி, ஊழியர்களின் விலகல் விகிதம் 12.6% ஆக குறைந்துள்ளது. இது செப்டம்பர் 2024-ல் 12.9% ஆகவும், ஜூன் 2025-ல் 12.8% ஆகவும் இருந்தது. இது கடந்த ஓராண்டில் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது.
மேலும், செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ஹெச்.சி.எல் டெக்கின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,26,640 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 2025 உடன் ஒப்பிடுகையில், இந்த ஒரு காலாண்டில் மட்டும் 3,489 புதிய ஊழியர்களை நிறுவனம் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 8,019 ஊழியர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெச்.சி.எல் டெக்கின் இந்த முடிவுகள், ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிப்பதிலும் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications