இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றிய ஒரு துறை என்றால் அது ஐடி துறை தான். ஐடி துறை வேலைவாய்ப்புகள் மூலம் ஐடி ஊழியர்களின் தனிநபர் வாழ்க்கையும் சரி, கரியர் வாழ்க்கையும் சரி செழிப்பாகியுள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கீட்டை கொண்டுள்ள ஐடி துறை கடந்த ஒரு வருடமாக அதிகப்படியான பிரச்சனைகளை அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதார பிரச்சனைகளால் புதிய வர்த்தகம் கிடைப்பத்தில் துவங்கி, AI துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி வரையில் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பங்கு முதலீட்டாளர்கள் ஐடி நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வரும் வேளையில் காலாண்டு முடிவுகளும வியக்க வைக்கும் வகையில் கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் புதிய மாற்றங்களையும், அதிரடி நடவடிக்கையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக் சமீபத்தில் ஐடி ஊழியர்களுக்கான ஹெச்ஆர் பாலிசியை மாற்றியுள்ளதாகவும் (கொரோனாவுக்கு முந்தைய கொள்கையை முறை), இதனால் ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
ஜூன் 1 ஆம் தேதி தான் டிசிஎஸ், தனது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஆபீஸ் குறித்த கண்டிப்பான விதிமுறை மற்றும் மெமோ குறித்த தகவலுக்கு மறுப்பும், விளக்கமும் கொடுத்தது. இந்த நிலையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் ஹெச்ஆர் பாலிசி மாற்றப்பட்டு உள்ளதாகவும், அதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழரான ஷிவ் நாடார் உருவாக்கிய ஹெச்சிஎல் டெக் நொய்டா-வை தலைமையிடமாக கொண்டு உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு டெக் சேவையை அளித்து வருகிறது. ஹெச்சிஎல் டெக் நிறுவனம் Engagement Performance Bonus தொகை வழங்குவதில் மாற்றத்தை செய்துள்ளது.
வேரியபிள் பே தொகையின் ஒரு பகுதி தான் இந்த Engagement Performance Bonus, இந்த தொகையை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு தனது உள் கணக்கீடு முறையின் கீழ் அளித்து வந்தது. புதிய மாற்றத்தின் கீழ் Engagement Performance Bonus தொகையை இனி காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

இது மட்டும் அல்லாமல் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த Engagement Performance Bonus தொகை வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தின் தொகை குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதேவேளையில் காலாண்டு அடிப்படையில் கிடைக்கும் வேரி.பிள் பே தொகை அதிகரிக்க உள்ளது.
இதுக்குறித்த அறிவிப்பை அனைத்து ஹெச்சிஎல் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த புதிய மாற்றத்தை ஹெச்சிஎல் செய்தி தொடர்பாளர் உறுதி அளித்துள்ளார், Engagement Performance Bonus தொகையை E3 பேண்ட் வரையில் உள்ள ஊழியர்களுக்கு காலாண்டு அடிப்படையில் அளிக்கப்பட உள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனத்தில் Engagement Performance Bonus என்பது ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 3-4 சதவீதம் மட்டுமே, இதில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கு சராசரியாக 80 சதவீதம் அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் இந்த Engagement Performance Bonus ஊழியர்கள் நலனுக்காக 100 சதவீதம் வழங்கப்பட்டது. தற்போது பழைய கொள்கை முறைக்கே மாற்றப்படுகிறது, இதனால் HCL ஊழியர்கள் கொரோனாவுக்கு முன்பு பெற்ற சம்பள முறை தற்போது கடைப்பிடிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications