இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் சிறப்பான காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ள போதிலும் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர்.
வெளிநாட்டு வர்த்தகத்தை பெறுவதில் விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் வேளையில் ஹெச்சிஎல் டிசம்பர் மாத காலாண்டில் 31 சதவீத லாப வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
2020ல் ஹெச்சிஎல் பல்வேறு நிர்வாக மாற்றங்களுடன் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில் 2019 டிசம்பர் காலாண்டில் 3,037 கோடி ரூபாய் லாபத்தை அடைந்த நிலையில், 2020 டிசம்பர் காலாண்டில் 31.1 சதவீத வளர்ச்சியில் 3,982 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் கணிப்புகளை உடைத்து அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமானத்தில் கணிசமான உயர்வு
இதேபோல் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானத்தின் அளவு கடந்த ஆண்டு 18,135 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் காலாண்டில் 19,302 கோடி ரூபாய் அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாலர் வருவாய்
மேலும் டாலர் மதிப்பில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 2.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2.62 பில்லியன் டாலர் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் நிலையான நாணய மதிப்பீட்டில் இதன் அளவு 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தொழில்நுட்பம்
2020 டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் டிஜிட்டல், கிளவுட், பிராடெக்ட் மற்றும் பிளாட்பார்ம் பிரிவுகளின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவான விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பங்கு மதிப்பு சரிவு
இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு அதிகப்படியாக 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. கடந்த வர்த்தக முடிவில் 1027.75 ரூபாய்க்கு நிறைவடைந்த நிலையில் இன்று காலை இந்நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிந்து 1003.35 புள்ளிகள் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications