இந்தியாவின் 3வது பெரிய IT சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஹெச்சிஎல் தனது நிதியியல் முடிவுகளை வெளியிட்டுள்ளது, இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,235 கோடியாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இதே ரூ.4,235 கோடியாக பதிவாகியுள்ளது. இதனால் லாபத்தில் எவ்விதமான மாற்றமின்றி அறிவித்துள்ளது.
இதேபோல் HCL டெக்னாலஜிஸின் செயல்பாட்டு வருவாய் இக்காலாண்டில் ரூ.31,942 கோடியாக பதிவாகியுள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் பதிவான ரூ.28,862 கோடியை விட 11% அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.30,349 கோடியாக இருந்த வருவாய், இப்போது 5.2% அதிகரித்து ரூ.31,942 கோடியாக உள்ளது.

மேலும் நிரந்தர நாணய விகிதத்தில் (Constant Currency - CC) வருவாய், காலாண்டு அடிப்படையில் 2.4%, வருடாந்திர அடிப்படையில் 4.6% உயர்ந்துள்ளது. டாலர் வருவாய் 3,644 மில்லியன் டாலராக பதிவாகியுள்ளது, இது காலாண்டு அடிப்படையில் 2.8% வருடாந்திர அடிப்படையில் 5.8% உயர்ந்துள்ளது.
2வது காலாண்டில் HCL டெக்னாலஜிஸ் 2,569 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 41.8 சதவீதமும, வருடாந்திர அடிப்படையில் 15.8 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ரூ.12 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பாக உள்ளது.
இக்காலாண்டு முடிவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3489 பேர் அதிகரித்து 226,640 ஆக உயர்ந்துள்ளது. டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ள வேளையில் ஹெச்சிஎல் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஏஐ பிரிவு வருவாய் 100 மில்லியன் டாலராக பதிவாகியுள்ளது, இந்தியாவில் முதல் ஐடி சேவை நிறுவனமாக ஏஐ பிரிவு வருவாய் அளவீட்டை வெளியிட்டு புது டிரெண்டை உருவாக்கியுள்ளது ஹெச்சிஎல்.


Click it and Unblock the Notifications