இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் பெங்களூரில் உள்ள தனது அலுவலக சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளது. ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிதாக சில துறையில் இறங்கவும் முடிவு செய்துள்ளது.
ஹெச்சிஎல் குரூப் கர்நாடகா மாநிலத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் OSAT தொழிற்சாலையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 400 மில்லியன் டாலர் அளவுக்கு ரோஷினி நாடார் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதற்காக கர்நாடக அரசு பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகிலும், மைசூரிலும் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளையில் ஹெச்சிஎல் நிர்வாகத்தில் முக்கியமான மூலோபாய மறுசீரமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக ரியல் எஸ்டேட் பிரிவில் அதிகம் முக்கியமில்லாத சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கவும், இதன் மூலம் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் பெங்களூரின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றான ஜிகானி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தன்னுடைய சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹெச்சிஎல் ஜிகானி கேம்பஸ்-ஐ விற்பனை செய்ய உள்ளது.

ஜிகானி கேம்பஸ் விற்பனையின் மூலம் HCL டெக் சுமார் ரூ. 550 கோடியை பெற வாய்ப்பு உள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த ஆண்டில், வன்பொருள் வணிகத்திலிருந்து வெளியேறியதால் பல சொத்துக்கள் இப்போது முக்கியமில்லாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால் சில சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் HCL டெக் கடந்த ஆண்டு சென்னையில் 6.5 ஏக்கர் நிலத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதோடு HCL Tech நடப்பு ஆண்டு இறுதிக்குள் தனது 70-75% பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. ஹெச்சிஎல் ஜிகானி கேம்பஸ் விற்பனை செய்வது மூலம் அதன் ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.


Click it and Unblock the Notifications