இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 2025 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 6% அதிகரித்து ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,350 கோடி லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஹெச்சிஎல் நிறுவனம் டிசம்பர் காலாண்டின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 5% வளர்ச்சியுடன் ரூ.29,890 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.28,446 கோடியாக இருந்தது.
மேலும் ஆப்ரேட்டிங் EBIT (வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்) வருடாந்திர அடிப்படையில் 4% வளர்ச்சியுடன் ரூ.5,821 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 9% வளர்ச்சியாகும்.
மேலும் நிலையான நாணய மதிப்பில் இக்காலாண்டிற்கான வருவாய் வளர்ச்சி வருடாந்திர அடிப்படையில் 4% ஆக உள்ளகு. அமெரிக்க டாலர் அடிப்படையில், இக்காலாண்டுக்கான வருவாய் 3.53 பில்லியன் டாலர்களை எட்டியது, இது வருடாந்திர அடிப்படையில் 3.5% அதிகமாகும்.
ஹெச்சிஎல் நிறுவனம் இக்காலாண்டில் பல்வேறு சேவைகள் மற்றும் மென்பொருள் சேவைகளை அளிப்பதற்காக 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் நிறுவனத்தின் செயல்திறன் குறித்து நம்பிக்கை அளிக்க கூடியாத இருப்பதாக தெரிவித்துள்ளார். ரோஷ்னி நாடார் மேலும் பேசுகையில் ஏஐ அடிப்படையிலான சேவைகளில் ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹெச்சிஎல் நிறுவனம் இக்காலாண்டில் துறைவாரியான வளர்ச்சி அளவீட்டை பார்க்கும் போது சேவை துறையின் வருவாய் நிலையான நாணய விகிதங்களில் வருடாந்திர அடிப்படையில் 5% மற்றும் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 2% வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளது. இதேபோல் டிஜிட்டல் வருவாய் 6% வருடாந்திர அடிப்படையில் வலுவான வளர்ச்சியைக் காட்டியது.
இன்றைய வர்த்தக முடிவில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் 0.52 சதவீதம் குறைந்து 1985.25 ரூபாயாக இருந்தது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு என்றால் 2011.00 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications