சென்னை: இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCLTech, சமீபத்தில் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைப் பங்கு உயர்வின் வாயிலாகக் கொடுத்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. சமீபத்தில் ஹெச்சிஎல் டெக் வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் மொத்த ஹெச்சிஎல் ஊழியர்களும் அரண்டு போய் உள்ளனர், என்ன நடந்தது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் ஹைப்ரிட் மாதிரியை அறிமுகம் செய்த பின்னர், ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்கப் பல முயற்சிகள் எடுத்தது, ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாள் அலுவலகத்திற்கு வருவதில்லை. இதில் கடுப்பான ஹெச்சிஎல் நிர்வாகம் நூதனமான ஒரு விதிமுறையைக் கொண்டு வந்தது.

தங்கள் ஊழியர்களின் விடுமுறை நாட்களை அலுவலக வருகை பதிவுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தவுள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம். இது, கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாகும்.
HCLTech நிறுவனத்தில், ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும், மேலும் மாதத்திற்கு குறைந்தது 12 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இல்லையெனில், அவர்கள் எத்தனை நாள் அலுவலகத்திற்கு வராமல் இருக்கிறார்களோ, அதற்கு இணையாக ஒவ்வொரு நாளுக்கும் அவர்களின் விடுப்பு நாட்கள் குறைக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வரும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி hybrid work model-ஐ அறிமுகம் செய்தது. இந்த நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை (HR) பிரிவு அதிகாரிகள் இந்த வாரத்திலிருந்து இந்த புதிய முறை அமலாக்கம் செய்யப்படும் என சில குழுக்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இது ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டதால் விதிமுறைகளை மதிக்காதவர்களின் விடுப்பு நாள் குறையும். போதுமான விடுப்பு நாட்கள் இல்லாதவர்களின் சம்பளம் குறைக்கப்படும்.
முன்னதாக, HCLTech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சி. விஜயகுமார் கூறுகையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் ஊழியர்களின் அலுவலக வருகையுடன் காலாண்டு வேரியபிள் சம்பளத்தை இணைத்ததைப் போல, ஊழியர்களின் அலுவலகத்திற்கு வருகை உடன் எந்த சம்பள பிரிவையும் நாங்கள் சேர்க்கவில்லை என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications