இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தற்போது ஷிவ் நாடார் அவர்களின் ஒரே மகளான ரோஷினி நாடார் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேளையிலும் ஒவ்வொரு காலாண்டிலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த 2 வருடத்தில் விப்ரோ, டெக் மஹிந்திரா-வை பின்னுக்குத்தள்ளி நாட்டின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜூன் காலாண்டு முடிவில் அதாவது 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் லாபத்தில் 7.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து சுமார் 3,534 கோடி ரூபாயை பெற்றுள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் இது 11.2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் உயர்ந்து 26,296 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் நிலையான நாணய மதிப்பீட்டில் வருவாய் காலாண்டு அடிப்படையில் 1.3 சதவீதம் சரிந்துள்ளது. வருடாந்திர வருவாய் வளர்ச்சி விகிதத்தை ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 12-14 சதவீதத்தில் இருந்து 6-8 சதவீதமாக குறைத்துள்ளது.
ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 18 பெரிய டீல்களை பெற்றுள்ளது, இகன் மூலம் மொத்தமாக 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை பெற்றுள்ளது. ஹெச்சிஎல் டெக் நிர்வாக குழு தனது முதலீட்டாளர்கள் பலன் பெறும் வகையில் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 10 ரூபாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் காலாண்டின் முடிவில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை வெறும் 2,23,438 ஆக உள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்-ன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 2,506 பேர் குறைந்துள்ளனர், இக்காலாண்டில் 1,597 பிரஷ்ஷர்களை ஹெச்சிஎல் டெக் சேர்த்துள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் ஹெச்சிஎல் டெக் நிறுவன பங்குகளின் விலை 0.74 சதவீதம் சரிந்து 1,106.50 ரூபாயாக உள்ளது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு மார்ச் காலாண்டில் 19.5 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் 16.3 சதவீதமாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications