தென்கொரியாவை சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் தான் உலக அளவில் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது . இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் கப்பல் கட்டுமானத்துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹெச்டி ஹுண்டாய் நிறுவனத்துடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளங்களை அமைக்க இருக்கிறது.

ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இவை அமைய இருக்கின்றன. இந்தியாவில் இந்த நிறுவனம் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளங்களை நிறுவ இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கொச்சின் ஷிப்யார்டு நிறுவனமும் ஹெச்டி ஹுண்டாய் நிறுவனமும் எந்தெந்த இடங்களில் எல்லாம் கப்பல் கட்டுமான தளங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு நடத்தி இடங்களை இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய கப்பல் கட்டுமான திட்டத்தை இந்த நிறுவனங்கள் முன்னெடுக்க இருக்கின்றன. ஹுண்டாய் நிறுவனம் இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதையும் இந்த நிறுவனங்கள் வெளியிடவில்லை .
இருந்தாலும் இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழ்நாடு அரசிடமும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமும் இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் தான் நிதித்துறை அமைச்சகத்தின் செலவின நிதி கமிட்டி நாட்டில் கப்பல் கட்டுமான தளங்களை அமைப்பதற்காக 18,090 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவது தொடர்பான ஒரு கொள்கைக்கு அனுமதி தந்தது .
பட்ஜெட்டிலும் இந்தியாவில் கப்பல் சம்பந்தப்பட்ட தொழில்களை ஊக்குவிப்பது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தான் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்கு முன் வந்திருக்கிறது. கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 1 சதவீதம் தான். 2030 ஆம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுமான துறையில் முதல் 10 நாடுகளுக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் முதல் 5 நாடுகளுக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நிறுவனம் முதலீடு செய்ய இருப்பது தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெரிய பொருளாதார வளர்சியை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது சிறந்த பங்களிப்பை தரும்.


Click it and Unblock the Notifications