இந்தியாவில் ஹெச் டி எஃப் சி வங்கி தொடங்கப்பட்டதில் இருந்தே, ஆதித்யா பூரி தான் நிர்வாக இயக்குர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவியில் இருந்து வருகிறார். வரும் அக்டோபர் 2020 வரை ஆதித்யா பூரி தான் சி இ ஓ மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பார். இவருக்குப் பிறகு யார் என்பதில் தான் சிக்கல்.
கடந்த 25 ஆண்டுகளில், ஆதித்யா பூரி, ஹெச் டி எஃப் சி வங்கியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத தனியார் வங்கியாக மாற்றிவிட்டார். தனி நபர் கடன், வீட்டுக் கடன், வியாபாரக் கடன் தொடங்கி எல்லாவற்றிலும் தொழில்நுட்பத்தை புகுத்தி, வங்கியை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விட்டார். இன்று இந்திய வங்கிகளில் ஒரு பெஞ்ச்மார்க் வங்கியாக ஹெச் டி எஃப் சி வங்கி இருக்கிறது என்றால், அதற்கு ஆதித்யா பூரியும் ஒரு முக்கிய காரணம்.

இவருக்குப் பின், யாரை அந்த பெரிய பதவியில் அமர்த்துவது என்பது தான் கேள்வி. இந்த கேள்விக்கு விடை காண ஹெச் டி எஃப் சி வங்கி ஒரு தனிக் குழுவை இன்று அமைத்து இருக்கிறார்களாம். இந்த குழு அமைக்கப்பட்டதை ஹெச் டி எஃப் சி வங்கியின் இயக்குநர் குழுவும் உறுதி செய்து இருக்கிறது.
- சியாமலா கோபிநாத்
- சஞ்ஜீவ் சச்சார்
- எம் டி ரங்கநாத்
- சந்தீப் பரேக்
- ஸ்ரீகாந்த் நாதமுனி
- கேகி மிஸ்த்ரி
என வங்கித் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு, அந்தத் தனிக் குழுவை அமைத்து இருக்கிறார்களாம்.
இந்த தனிக் குழு, ஹெச் டி எஃப் சி வங்கிக்குள் வேலை பார்ப்பவர்கள், மற்ற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வங்கித் துறையில் பெரிதாக சாதித்தவர்கள் என பலரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்து, ஒரு முடிவுக்கு வருவார்களாம். இந்த குழுவுக்கு ஆதித்யா பூரி ஒரு ஆலோசகராக மட்டும் இருந்து வழி காட்ட இருக்கிறாராம்.
ஹெச் டி எஃப் சி வங்கி, உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட ஒரு வங்கி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற பெரிய சந்தையில், அதுவும் வளர்ச்சி கண்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், ஆதித்யா பூரிக்குப் பின் வருபவர், திறமை சாலியாக இருந்தால், வங்கியின் மதிப்பு இன்னும் உயரும். பொறுத்திருந்து பார்ப்போம்... யார் அடுத்த அதித்யா பூரி என்று..!


Click it and Unblock the Notifications