இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி அக்டோபர் 16 ஆம் தேதி தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. சமீபத்தில் ஹெச்டிஎப்சி வங்கி முதலீட்டாளர்களை கலங்கடிக்கும் வகையில் பல தரவுகள் வெளி வந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் இக்காலாண்டு முடிவுக்காக மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர்.
ஹெச்டிஎப்சி வங்கி நடப்பு நிதியாண்டில் சுமார் 15,976.11 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 50 சதவீதம் அதிகமாகும். லாபத்தில் 50 சதவீதம் உயர்வு என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இந்த தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு.

ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு பின்பு வெளியிடப்படும் முதல் காலாண்டு முடிவு அறிக்கை என்பதால் 50 சதவீத உயர்வில் லாபத்தை பதிவு செய்துள்ளது. ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் மொத்த லாபமாக 33.7 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
மொத்த வருவாய் அளவு 33.1 சதவீதம் உயர்ந்து 38,093 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வட்டி வருமானம் 30.3 சதவீதம் அதிகரித்து 27,385 கோடி ரூபாயாக உள்ளது. கோர் நெட் இன்டிரெஸ்ட் மார்ஜின் அளவு 3.65 சதவீதமாக உள்ளது.
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு பின்பு இவ்வங்கியின் வாராக் கடன் அளவில் செப்டம்பர் காலாண்டில் 1.34 சதவீதமாக இருந்தது. NET NPA அளவு 0.30 சதவீதத்தில் இருந்து 0.35 சதவீதமாக காலாண்டு அடிப்படையில் உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி-யின் ஆப்ரேட்டிங் லாபம் 30.5 சதவீதம் அதிகரித்து 22,694 கோடி ரூபாயாக உள்ளது. இக்கூட்டணி நிறுவனத்தின் வருவாய் 114.8 சதவீதம் அதிகரித்து 66,317 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 30,871 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் வரிக்கு பிந்தைய லாப அளவில் முதல் அரையாண்டில் 40.9 சதவீதம் அதிகரித்து 29,182 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பங்கிற்கான வருவாய் அளவில் 22.2 ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 30 முடிவில் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 7945 வங்கி கிளைகள், 20596 ஏடிஎம் உடன் 3836 நகரம் மற்றும் கிராமங்களில் இயங்கி வருகிறது.
ஹெச்டிஎப்சி வங்கியில் சுமார் 1,97,899 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications