இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் HDFC வங்கி பங்குகள் புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் 7% அதிகமாகச் சரிந்தன. 2024 ஆம் நிதியாண்டின் இவ்வங்கியின் மூன்றாம் காலாண்டு முடிவுகளில் நிகர வட்டி வரம்பு அளவு சந்தை கணிப்பை விடவும் குறைவாக இருந்த காரணத்தால் இன்று அதிகப்படியான சரிவைப் பங்குச்சந்தையில் எதிரொலித்து வருகிறது.
மே 4, 2020க்குப் பிறகு மிகப் பெரிய சரிவை இன்று ஹெச்டிஎப்சி பங்குகள் எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி பங்குகள் 7.29 சதவீதம் சரிந்து 1556.50 ரூபாய்க்குத் தற்போது வர்த்தகம் செய்யப்படுகிறது.

HDFC வங்கி பங்குகள் சரிவால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 1%க்கு மேல் சரிந்துள்ளது. இதேவேளையில் வங்கி நிஃப்டி புதன்கிழமை காலாவதி ஆகும் காரணத்தால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி வங்கி குறியீடு 3.31% வரை சரிந்தது. இந்தச் சரிவுக்கு முக்கியமான காரணமாக HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை இருந்தது.
இன்றைய சரிவின் மூலம் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பில் ரூ.82,720.1 கோடியை இழந்துள்ளது. இது ஹெச்டிஎப்சி வங்கி நிஃப்டி 50 குறியீட்டில் சுமார் 13.52% பங்கீட்டைக் கொண்டுள்ளது, மேலும் நிஃப்டி நிதிச் சேவைத் துறை நிஃப்டி 50 இல் 35.26% வெயிட்டேஜைக் கொண்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் கடந்த வருடத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட 34% உயர்ந்து ரூ.16,372.54 கோடியாக உள்ளது. இதுவே செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 2.5% உயர்ந்தது. ஜூலை 1, 2023ல் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த இணைப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII), அதாவது டிசம்பர் காலாண்டில் சம்பாதித்த வட்டி வருமானத்திற்கும், செலவழிக்கப்பட்ட வட்டி வருமானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 24% அதிகரித்து ரூ.28,471.34 கோடியாக உள்ளது. காலாண்டு அடிப்படையில் நிகர வட்டி வருமானம் கிட்டத்தட்ட 4% வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி முடிவுகளைப் பார்த்து Bernstein Research, இவ்வங்கியின் கடன் - வைப்பு நிதி விகிதம் மற்றும் நிகர வட்டி வரம்பு அளவுகள் ஏமாற்றம் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் கோர் நெட் இன்ட்ரெஸ்ட் மார்ஜின் 3.4 சதவீதமாக உள்ளது, ஆனால் இதன் அடிப்படை சொத்து வட்டி வருமானத்தின் அளவு 3.6 சதவீதம்.


Click it and Unblock the Notifications