கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகள் மற்றும் ரிவார்டு பாய்ண்டுகளை வாரி வழங்குகின்றன. அந்த வகையில் முன்னணி தனியார் வங்கியான HDFC பேங்க் சில பிரீமியம் கார்டுகளுக்கு அதிக அளவிலான ரிவார்ட் பாயிண்ட்களை வழங்கி வந்தது. ரெகாலியா கோல்டு, டைனர்ஸ் பிரிவிலேஜ் போன்ற கார்டுகள் சில வாடிக்கையாளர்களின் ஃபேவரட் சாய்ஸ் என்றே சொல்லலாம். ஆனால் இப்போது இந்த கிரெடிட் கார்டுகளின் ரிவார்டுகளை குறைத்து அறிவித்திருக்கிறது. இது கிரெடிட் கார்டு பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரீமியம் கார்டு பிரிவில் தங்களுடைய லாபத்தை அதிகரிக்கவும், கார்டு தாரர்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்கனவே சில மாற்றங்கள் மே 5 முதல் அமலுக்கு வந்துவிட்டன, சில வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
ரெகாலியா கோல்டு கார்டுகள்: இனி ரெகாலியா கோல்ட் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் செய்யும் செலவுக்கு ஐந்து ரிவார்ட் பாய்ண்டுகள் கிடைக்கும். அதாவது 200 ரூபாய் செலவு செய்தால் 5 ரிவார்ட் பாய்ண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 150 செலவு செய்தாலே 4 ரிவார்ட் பாய்ண்டுகள் கிடைத்தன.

இலவச ஓய்வறை வசதி: ரேகாலியா கோல்ட் மற்றும் டைனர்ஸ் பிரிவிலேஜ் ஆகிய இரண்டு கார்டுகளையும் பயன்படுத்தி ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே அடுத்த காலாண்டில் இலவச ஓய்வறையை பயன்படுத்த முடியும். இதுதான் இந்த இரண்டு பிரிமியம் யூசர்களுக்கும் வங்கி கொடுத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்.
வங்கியின் விதிமுறைகளுக்கு தகுதி பெறும் வாடிக்கையாளர்கள் ஒரு காலாண்டில் மூன்று முறை லவுஞ்ச் வசதியைப் பயன்படுத்தலாம். இன்டர்நேஷனல் லவுஞ்ச் பயன்படுத்த வழங்கப்படும் பிரையாரிட்டி பாஸ் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல டைனர்ஸ் பிரிவிலேஜ் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் பை தளம் மூலமாக இலவச வவுச்சர்கள் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு காலாண்டிற்கும் 2 உள்நாட்டு லவுஞ்ச் மற்றும் ஒரு இன்டர்நேஷனல் லவுஞ்ச்-க்கான வவுச்சர் கிடைக்கும்.
இந்திய ரூபாயில் பில் செய்யப்படும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் கட்டணம் 1.75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, புதிய கார்டு வாங்குவதற்கு இனி ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும்.
தங்கள் ரிவார்டுகளில் மாற்றம் செய்தாலும் வங்கி ரெகாலியா கோல்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. "Travel Edge" என்ற திட்டத்தின் மூலம் ஏர்போர்ட் டிரான்ஸ்பர், டைனிங் ரிவார்டுகள், ஸ்பா ரிவார்டுகள் மற்றும் ஹோட்டல் ரூம் அப்கிரேடு போன்ற சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications