நல்ல சம்பளம்.. அதுவும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை.. இதைவிட வேறென்ன வேண்டும் ஒவ்வொரு பட்டதாரிக்கும்.. இப்படி ஒரு வேலை மட்டும் கிடைத்துவிட்டால் அதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விட மாட்டார்கள். அப்படித்தான் ஒருவர் நல்ல வேலையில் இருந்து கொண்டு ஆண்டுக்கு ரூ.4.25 கோடி சம்பளம் பெற்று வந்தார். ஆனால் அந்த வேலையை அப்படியே உதறித் தள்ளிவிட்டு தற்போது டெக்ஸாஸ் நகரில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சம்பளத்தை விட சுமார் 4 மடங்கு அதிக வருமானமும் அவருக்கு கிடைக்கிறது.
சலாஹுதீன் அப்துல்-காஃபி என்பவர் 35 வயதான IT ஊழியர். இவர் மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப் மற்றும் குரூஸ் போன்ற உலகளவில் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தான் இறுதியாக வேலை பார்த்த நிறுவனத்தில் 4,50,000 டாலர் வருமானமும் பெற்று வந்தார். அதாவது இந்திய மதிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.4.25 கோடி.
இந்த வேலை என்னவோ அவருக்கு பிடிக்கவில்லை. வெறும் லாபத்திற்காக மட்டுமே செயல்படும் துறையாக ஐடி துறை மாறிவிட்டதாக அவருக்குள் ஒரு உணர்வு. இதனால் மன நிம்மதியைத் தேடி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வெளியேறி சில நாட்கள் ஆன்மீக தொண்டாற்றினார். அங்கு அவருடைய சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது.

ஆனால் அதில் அவருக்கு திருப்தி இருந்தது. மேலும் விடுமுறை நாட்களில் சலாஹுதீன் தன்னுடைய நண்பர்களை அழைத்து பார்பிக்யூ சமைத்து தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய கை பக்குவத்திற்கு அவருடைய நண்பர்கள் அடிமை. இதனால் எப்போதும் அவரை பாராட்டி கொண்டே இருப்பார்களாம். ஏன் இதையே நீ ஒரு தொழிலாக செய்யக்கூடாது? என்று சலாஹுதீனுக்கு அவருடைய நண்பர்கள் தான் ஐடியா கொடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்கனவே டெக்ஸாஸ் பார்பிக்யூ என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடை அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். ஆனால் அங்கு இஸ்லாமியர்களுக்கு ஏற்றவாறு செயல்படும் ஹலால் ரெஸ்டாரண்டுகள் பெரிதாக ஒன்றும் இல்லை. இதனால் ஹலால் பார்பிக்யூ கடையை தொடங்கும்படி அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சலாஹுதீன் "காஃபி பார்பிக்யூ (Kafi BBQ)" என்ற உணவகத்தைத் தொடங்கினார்.
உணவகத்தைத் தொடங்கிய போதே அடுத்து வரும் 3 நாட்களுக்கு தேவைப்படும் உணவுகளை தயார் நிலையில் வைத்திருந்துள்ளனர். ஆனால் மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கவில்லை. கடை திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து உணவுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் அன்றைய தினம் இரவோடு இரவாக மறுநாள் சமையலை தொடங்கியுள்ளனர். தற்போது ஒரே ஒரு ஏரியாவில் சலாஹுதீன் தொடங்கிய ஹோட்டல் இன்று பல இடங்களில் விரிவடைந்துள்ளது.
இதனால் முதல் வருட வருமானமே 2.3 மில்லியன் டாலர் வரை கிடைத்துள்ளது. இந்திய மதிப்பிற்கு பார்த்தால் சுமார் 21 கோடி ரூபாய். 2026-ஆம் ஆண்டில் 4 மில்லியன் வரை வருமானத்தை அதிகரிக்க சலாஹுதீன் திட்டமிட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய உணவகத்தை தொடங்க வேண்டுமானால் அது சாதாரண விஷயம் கிடையாது. கண்டிப்பாக அதற்கு முதலீடு செய்திருக்க வேண்டும்.
அப்படித்தான் சலாஹுதீனும் உணவகத்தை தொடங்குவதற்காக 1 மில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளார். அதோடு கடையை சரிவர நடத்துவதற்கு மாதம் 2,15,000 டாலர் வரை செலவாகிறது. இதில் உணவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளமாக 50,000 டாலரை செலவிடுகிறார். உணவுக்காக 1,25,000 டாலர் வரை செலவிடுகிறார். இதில் வாடகை செலவு 15,000 டாலரும் அடங்கும்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. பணம், கௌரவமான வேலை என எல்லாவற்றையும் தாண்டி மனதிற்குப் பிடித்த விஷயம் தான் உண்மையிலேயே ஒருவரை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. வெறும் பேங்க் பேலன்ஸை தாண்டி மனநிறைவுடன் செய்யும் வேலையே மகிழ்ச்சிக்கு வித்திடும் என்பது தான் நிதர்சன உண்மை.


Click it and Unblock the Notifications