இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என நீண்ட காலமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு என கூறினாலும் அவ்வப்போது இந்திய பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்து நெருக்கடி தருகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு இந்திய பொருட்களுக்கு திடீரென 50% வரியை விதித்தார். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த திருப்பூர், ஈரோடு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்கள் செய்வதறியாமல் திகைத்து போனார்கள். இந்நிலையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்தது.

ஓராண்டு காலமாக இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இது வரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அனுமதி தருவது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை ஒரு நல்ல நண்பர் என்றும், இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப் படுகின்றன என்று விசாரணைகள் வெளிப்படுத்தி உள்ளதாகக் கூறி, 12.5 சதவீதம் கூடுதல் சுங்க வரியை அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த டிரம்ப் பல தகவல்களை பகிர்ந்தார்.
அப்போது பல ஆண்டுகளாக, இந்தியா அமெரிக்காவைச் சுரண்டி வந்தது. அவர்கள் எங்கள் மீது பெரும் வரிகளை விதித்துவிட்டு, எதையும் செலுத்தவில்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறி, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து நிறைய பணம் சம்பாதிக்கிறோம் என்றார். இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும், ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர் எனது நல்ல நண்பர், நாங்கள் நன்றாகப் பழகுகிறோம். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது என கூறினார்.
ஈரான் போர் தொடர்பாக பேசிய டிரம்ப் ஈரானிடம் கடற்படையும் இல்லை, விமானப்படையும் இல்லை, நாங்கள் அவர்களின் தலைமையை அழித்துவிட்டோம். பிறகு, அவர்கள் போரில் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதாகப் போலிச் செய்திகளில் படிக்கிறீர்கள் என்றார். இது நம்பமுடியாதது. அவர்களிடம் 159 கப்பல்கள் உள்ளன, அவை அனைத்தும் கடலின் அடியில் கிடக்கின்றன, நாங்கள் அங்கு அவற்றைப் புகைப்படம் எடுத்துள்ளோம் என அதிபர் டிரம்ப் கூறினார்.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வருகை தந்த குழுவினர் 4 நாட்கள் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து முதல்கட்டமாக ஒரு தற்காலிக ஒப்பந்தமும் பின்னர் விரிவான ஒரு நிரந்தர ஒப்பந்தமும் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

