சென்னை: மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65 என்பதை அண்மையில் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ ரத்து செய்தது. அதாவது இதற்கு முன்பு 65 வயது வரை மட்டுமே ஒருவரால் புதிதாக மருத்துவ காப்பீட்டினை எடுக்க முடியும்.
ஆனால் இனி வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் புதிதாக மருத்துவ காப்பீட்டை எடுத்து பயன்பெற முடியும். மருத்துவ காப்பீட்டுக்கான உச்சபட்ச வயது வரம்பு என்பது நீக்கப்பட்டிருக்கிறது.

ஐஆர்டிஏவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டிற்கு பிரீமியம் தொகை எவ்வளவு இருக்கும்? என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஐஆர்டிஏ-வின் இந்த அறிவிப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அவர்களுக்காக புதிதாக மருத்துவ காப்பீட்டினை பெற முடியும். ஆனால் சந்தையில் தற்போது மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டங்கள் என்பது குறைவாகவே இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே காப்பீட்டு நிறுவனங்கள் இனி மூத்த குடிமக்களுக்கு என பிரத்தியேக காப்பீடு திட்டங்களை சந்தையில் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வயது வரம்பை நீக்கியது முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும், அதனுடன் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI), ஏப்ரல் 1, 2024 முதல், preexisting conditions எனப்படும், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளது.
இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும், இதன் காரணமாக, பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காப்பீட்டு செலவை 10-15% வரை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ACKO நிறுவனத்தின் துணைத் தலைவர் (வணிக மருத்துவம்) திரு. ரூபின்டர்ஜித் சிங் அவர்கள், "பொதுவாக, நோய்வாய்ப்படும் அபாயம் (morbidity risk) அதிகரிப்பதற்கேற்ப, ஒவ்வொரு ஐந்து வருட வயது பிரிவிலும், காப்பீட்டு பிரீமியம் சராசரியாக 10% முதல் 20% வரை உயர்கிறது.
இந்த புதிய விதிமுறை மாற்றத்தின் காரணமாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் காரணம் காட்டி, காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.
முதியோர்களுக்கு ஏற்கனவே மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த ப்ரீமியம் உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். குறைந்த வருமானம் ஈட்டும் முதியோர்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும்.
தற்போதுள்ள உங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை புதுப்பிக்கும் போது, பிரீமியம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அதிகரிப்பு அதிகமாக இருந்தால், பிற காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்த விலையில் கிடைக்கும் திட்டத்திற்கு மாறலாம்.
புதிதாக ஒரு மருத்துவ காப்பீட்டை பெரும்பொழுது மூத்த குடிமக்கள் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியது இருக்கும். ஒருவேளை அவர்களுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் அதற்கு ஏற்றபடி அவர்கள் செலுத்த வேண்டிய வருடாந்திர பிரீமியம் தொகை என்பது அதிகரிக்கும்.
மூத்த குடிமக்களை பொறுத்தவரை அவர்களுக்கான முழு உடல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ தேவைகள் என்பது அதிகமாகவே இருக்கும். எனவே காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கு ஏற்ற வகையில் தான் பிரீமியம் தொகைகளை நிர்ணயம் செய்யும்.
உதாரணத்திற்கு 70 வயதான ஒரு முதியவர் புதிய விதிமுறையின்படி தற்போது முதன்முறையாக மருத்துவ காப்பீடு பெற இருக்கிறார் என்ற பட்சத்தில் அவர் அதிகபட்ச பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியதிருக்கும் எனக் கூறுகிறார் Bharatsure நிறுவனத்தின் துணை நிறுவனர் அனுஷ் பரேக்.
65 வயதான ஒரு நபர் ஏற்கனவே சில உடல் நல பிரச்சனைகளை கொண்டிருக்கிறார் எனில் அவர் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுக்க பிரீமியம் தொகையாக 41,000 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும் என செக்யூர் நவ் இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த பிரீமியம் தொகையானது அந்த நபருக்கு ஏற்கனவே உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை பொறுத்து அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.
இதுவே காம்ப்ரிஹென்சிவ் திட்டமாக எடுக்கும் போது 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தின் ப்ரிமியம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கக் கூடும் என்கிறார். மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு எடுக்கும்போது மூத்த குடிமக்கள் 1 லட்சம் ரூபாயை ப்ரீமியமாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.
ஒருவேளை ஒரு நிதியாண்டில் அவர் அதிக கிளெய்ம்களை பெறுகிறார் என்றால் பாலிசி புதுப்பித்தலின் போது அதற்கேற்றபடியும் அவரது பிரீமியம் தொகையானது உயரும் என கூறுகிறார். ப்ரீமியம் தொகையில் மூத்த குடிமக்களுக்கான ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications