இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ (IRDAI) , மருத்துவ காப்பீட்டில் பாலிசிதாரர்களுக்கு சாதகமான பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மருத்துவ காப்பீட்டை வழங்குகின்றன.
ஆனால் அதில் கிளெய்ம் என வரும் போது அதை எவ்வாறெல்லாம் குறைக்க முடியும் என்று தான் பார்க்கின்றன. அதுமட்டுமின்றி கிளெய்ம் நடைமுறைகளுக்கு பல முறை அலைய வைக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஆர்டிஏஐ காப்பீட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.

ஐஆர்டிஏஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் , காப்பீடு பெற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது, செட்டில்மெண்ட் கோரிக்கை வழங்கப்பட்ட மூன்று மணி நேரங்களில் காப்பீடு நிறுவனம் அந்த செட்டில்மெண்ட்டை முடிக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறி அந்த நோயாளி மருத்துவமனையில் கூடுதல் நேரம் தங்க நேர்ந்து, அதற்கு மருத்துவமனை கட்டணங்களை விதித்தால் அதனை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்க வேண்டும் என கூறியுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் தாமதத்தால் உருவாகும் கூடுதல் கட்டணங்களுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
மே 29ஆம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், காப்பீடு பெற்றவர்களுக்கு சாதகமான பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஜூலை 1ஆம் தேதி முதல் கேஷ்லெஸ் எனப்படும் பணமில்லா கோரிக்கைகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்குள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் காப்பீட்டு நிறுவனங்களின் தாமதம் காரணமாக பாலிசிதாரர் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலை ஏற்படக் கூடாது.
ஒரு நபர் 60 மாதங்களாக தொடர்ச்சியாக காப்பீடு எடுத்துள்ளார் என்ற பட்சத்தில் அவரது கோரிக்கையை சாக்குபோக்கு சொல்லி நிராகரிக்க முடியாது, அவர்கள் மோசடி செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு பாலிசிகளை ரத்து செய்வதற்கான கட்டணங்களையும் ஐஆர்டிஏஐ குறைத்துள்ளது.அதாவது புதுப்பித்தலுக்கு 30 நாட்களுக்கு பின்னர் ஒரு வாடிக்கையாளர் ஏழு நாட்கள் முன்னறிவிப்போடு பாலிசியை ரத்து செய்து விகிதாச்சார ப்ரீமியத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்குள் எந்த ஒரு கிளெய்மும் செய்திருக்க கூடாது. இதற்கு முன்பு காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி ரத்து கட்டணங்களை அதிகளவில் விதித்து வந்தன. தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு குறை தீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற தவறினால் புகார் அளித்தவருக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் காப்பீட்டு நிறுவனம் அபராத தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
பாலிசிதாரரின் கிளெய்ம்களை தனிநபர் நிராகரிக்க கூடாது மூன்று உறுப்பினர்கள் கொண்ட கமிட்டிக்கே அதற்கான உரிமை உள்ளது.
சில நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது. oral chemotherapy, intra-vitreal injections, robotic surgeries, stereotactic radio surgeries, bronchial thermoplasty, stem cell therapy உள்ளிட்டவற்றை காப்பீட்டினுள் கொண்டு வர உத்தரவிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications