பொதுக் காப்பீட்டுக் கவுன்சில் (GIC) பொது மற்றும் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சையை நீட்டிக்க 'Cashless Everywhere' முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளவர்களுக்கு இருக்கும் பெரும் தலைவலியைப் போக்கியுள்ளது என்றால் மிகையில்லை.
ஒரு காப்பீட்டாளர்களின் நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைகளில் கூட இனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் பணமில்லா சிகிச்சை பெறும் வசதிகளைப் பெறலாம். இப்புதிய வசதிகள் குறித்து முழுமையாகத் தெரிந்துக்கொள்வோம் வாங்க.

ஹெல்த் இன்சூரன்ஸ்: இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டணி வைத்துள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர் பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும். இந்தச் சேவை மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவச் செலவுகளை நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் செலுத்திவிடும.
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனை: இதுவே நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையாக இருந்தால், பாலிசிதாரர் பெறும் மருத்துவச் சிகிச்சைக்குத் தனது பாக்கெட்டில் இருந்து முழுத் தொகையையும் செலுத்த வேண்டும், பின்னர் செலுத்திய தொகைக்கு reimbursement செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
புதிய திட்டம்: தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள Cashless Everywhere அமைப்பின் கீழ், ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்றுள்ள ஒருவர் தாங்கள் விருப்பத்தின் படி எந்த மருத்துவமனையிலும் பணமில்லா மருத்துவச் சிகிச்சையைப் பெறலாம்.
பணம் செலுத்தும் முறை: இது காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் அந்த மருத்துவமனை இல்லாவிட்டாலும், காப்பீட்டாளர் மருத்துவமனை பில் தொகையை மருத்துவமனையில் செலுத்துவார். இதன் மூலம் பாலிசிதாரருக்குப் பணமில்லா சிகிச்சையைப் பெற அனுமதிக்கிறது.
முக்கியக் கண்டிஷன்: இந்த Cashless Everywhere சேவை பெற பாலிசிதாரர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு தெரிவிக்க வேண்டும். எமர்ஜென்சி சிகிச்சை எனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஜனவரி 24 முதல் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
எங்கெல்லாம் கிடைக்கும்: 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனச் சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில சுகாதாரத் துறையிடம் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருத்துவமனையிலும் இப்போது பணமில்லா சிகிச்சையைப் பெறலாம்.
என்ன பலன்: இந்த Cashless Everywhere சேவை மூலம் இனி மருத்துவமனை எல்லாம் நெட்வொர்க்-ல் இருக்கிறது எனச் செக் செய்யும் தொல்லை இல்லை. அதேபோல் எமர்ஜென்சி நேரத்தில் பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதோடு சிறந்த டிரீட்மென்ட் கிடைக்கும் மருத்துவமனைக்குத் தடையில்லாமல் செல்ல முடியும்.
லாபம்: தற்போது இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்றவர்களில் 63 சதவீதம் பேர் கேஷ்லெஸ் சேவையைப் பெறுகின்றனர். மீதமுள்ளவர்கள் கடுமையான reimbursement செயல்முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. Cashless Everywhere சேவை மூலம் இனி 100 சதவீத மக்களும் பணமில்லா சேவையைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications