சென்னை: இந்தியாவில் ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் தொலை தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர் இனி சிக்னல் இல்லை என்றால் மற்ற நிறுவனத்தின் நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தலாம்.
இதற்காகவே இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் (Intra Circle Roaming (ICR)) எனப்படும் ஐசிஆர் சேவையை இந்திய தொலை தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது. Digital Bharat Nidhi அதாவது டிபிஎன் எனப்படும் இந்தியாவில் தொலை தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நிதியின் கீழ் கட்டமைக்கப்பட்ட மொபைல் டவர்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி ஜியோ வாடிக்கையாளருக்கு சிக்னல் கிடைக்கவில்லை அதே சமயம் அந்த பகுதியில் ஏர்டெல் அல்லது பிஎஸ் என் எல் சிக்னல் கிடைக்கிறது என்றால் அவர்கள் அதனை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 4ஜி சேவைகளை இவ்வாறு வேறு நிறுவன நெட்வொர்க் சிக்னல் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி சிக்னல் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையே மக்களுக்கு இருக்காது என நம்பப்படுகிறது.
மத்திய தொலை தொடர்பு துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிபிஎன் எனப்படும் அரசாங்க நிதியுதவியுடன் இயங்க கூடிய மொபைல் டவர்களில் தொலைதொடர்பு சேவை வழங்கும் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வெவ்வேறு நெட்வொர்க்குகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒரே டவரில் இருந்து 4G இணைப்பை பெற வசதியை தந்துள்ளது.
எனவே ஒரே இடத்தில் பல நிறுவனங்களின் டவர்களை அமைத்து அதனை பராமரிக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே நிறுவனங்களுக்கு டவர்களுக்கான செலவினம் குறையும். அதே போல வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் இல்லை என்ற தொந்தரவு இருக்காது.
இந்த புதிய முயற்சி மூலம் 35,400-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு நம்பகமான 4G இணைப்பு கிடைக்கும் என மத்திய அரசு கூறுகிறது. முதற்கட்டமாக சுமார் 27,000 டவர்கள் இந்த பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். டிபிஎன் நிதியுதவியால் நிறுவப்பட்ட 4G மொபைல் டவர்களில் இந்த ஐசிஆர் சேவை தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகியவை டிபிஎன் நிதியளிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் தங்கள் நெட்வொர்க்குகளைப் பகிர்ந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். எனவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது மேலும் வாடிக்கையாளர்களை கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் ஆகியவை அதிக ரீசார்ஜ் கட்டணங்களை கொண்டிருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் வேளையில் டவர் பிரச்சினையும் இதன் மூலம் தீர்க்கப்படுவது அதற்கு சாதகமாக அமைந்துவிட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications