சென்னை: இந்தியாவில் தொலை தொடர்பு சேவை துறையில் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. முகேஷ் அம்பானியின் ஜியோ தான் நம்பர் ஒன் தொலைதொடர்பு சேவை நிறுவனமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஜியோ முதலிடத்திலும் ஏர்டெல் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.
இந்நிலையில் தான் ஜூலை மாதம் திடீரென ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்தின, இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அரசு தொலை தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு மாற தொடங்கினர். இந்தியாவில் ஜூலை மாதத்திற்கு பிறகு ஜியோ, ஏர்டெல் ஆகியவை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டன.

அதே வேளையில் பிஎஸ்என்எல் லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களை தக்க வைக்க நாடு முழுவதும் 4ஜி சேவை, 5 ஜி சேவை, சாட்டிலைட் இணைப்பு மூலம் தொலைதொடர்பு என பல புதிய அம்சங்களை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் சிம்மை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்றுவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்வோம்.
முதலில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உங்கள் எண்ணை போர்ட் செய்து கொள்வது மிகவும் எளிதானது. தனியார் நிறுவன வாடிக்கையாளர்கள்1900 என்ற எண்ணுக்கு PORT என டைப் செய்து தங்களின் 10 இலக்க செல்போன் எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும். அப்போது Unique Porting Code (UPC) என்பது உருவாகும்.
உங்கள் நம்பரை போர்ட் செய்வது இந்த கோடு தான் மிகவும் முக்கியம். இந்த கோடினை பெற்ற வாடிகையாளர்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு செல்லலாம் அல்லது ஆன்லைனிலேயே வேலையை முடிக்கலாம். இதற்கு முதலில் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் 'MOBILE NUMBER PORTABILITY' என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும், அதில் உங்களுக்கு வந்த UPC கோடினை உள்ளிட வேண்டும். பின்னர் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதனை பிஎஸ்என்எல் நிறுவனம் ஆய்வு செய்து உங்கள் கோரிக்கையை ஏற்று நம்பரை போர்ட் செய்து விவரங்களை அனுப்பி வைக்கும்.
பிஎஸ்என்எல் அலுவலகம் செல்லும் வாடிக்கையாளர்கள் அங்கே அடையாள சான்றினை தாக்கல் செய்து நம்பரை போர்ட் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதிகாரிகள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து உங்களுக்கு போஸ்ட் பெய்டு அல்லது ப்ரீ பெய்டு என எந்த பிளான் தேவையோ அதனை வழங்குவார்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications