2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருக்கிறது. இதன் மூலம் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பெரிய அளவிலான தொகையை சேமிக்க முடியும்.
6 மாதத்தில் 1% வட்டி குறைப்பு: 2025 ஆம் ஆண்டு தொடங்கியிருந்து தற்போது வரை மூன்று முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதம் நடந்த கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. இந்த சூழலில் ஜூன் மாதத்தில் 50 புள்ளிகள் அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்திருக்கிறது. மொத்தமாக இந்த ஆறு மாதத்தில் மட்டும் இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதமானது 1 சதவீதம் வரை குறைந்துள்ளது.

கடன் வாங்கியவர்கள் நிம்மதி: ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் வரை குறைந்திருப்பது வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் குறைந்துள்ளன. அதாவது 8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.5 சதவீதம் என குறைந்திருக்கிறது. இது வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களை வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் வட்டி சேமிப்பை ஏற்படுத்தி தருகிறது.
கடன் வாங்கியவர்கள் என்ன செய்யலாம்: பொதுவாக ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் போதெல்லாம் வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.ஒன்று உங்களின் மாதாந்திர ஈஎம்ஐ தொகையை வட்டி விகித குறைப்புக்கு ஏற்ப குறைப்பது அல்லது ஈஎம்ஐ தொகையை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைப்பது.
1 சதவீதம் வரையிலான வட்டி குறைப்பு வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு எவ்வளவு ரூபாயை சேமித்து தரும் என்பதை ஒரு உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம்.
கடன் தொகை : 1 கோடி ரூபாய்
கடன் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் (240 மாதங்கள்)
முதலில் இருந்த 8.5% வட்டி விகிதத்தில் மாதம் ஈஎம்ஐ - ரூ. 86,782
1% குறைந்த பின்னர் 7.5% வட்டியில் மாதம் ஈஎம்ஐ - ரூ.80,599
240 மாதங்களில் வட்டி சேமிப்பு - 14.93 லட்சம் ரூபாய்
இந்த 1% வட்டி குறைப்புக்கு பின்னர் மாதாந்திர ஈஎம்ஐ தொகையில் இந்த நபர் 6,223 ரூபாயை சேமிக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகையும் 1.08 கோடி ரூபாயில் இருந்து 93 லட்சங்களாக குறைந்துவிடும். அதாவது 1 % வட்டி விகித குறைப்பு இவர் செலுத்த வேண்டிய வட்டி தொகையில் 14.93 லட்சம் ரூபாயை சேமித்து தந்துள்ளது என பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
ஒரு வேளை இந்த நபர் ஈஎம்ஐ தொகை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைத்து கொள்ளும் வாய்ப்பை தேர்வு செய்தால்,
கடன் தொகை : 1 கோடி ரூபாய்
வட்டி -7.5%
மாதம் ஈஎம்ஐ (வட்டி குறைந்தாலும் ஈஎம்ஐ தொகையை குறைக்காமல்) - ரூ. 86,782
கடன் செலுத்தும் காலம் 204 மாதங்கள்
வட்டி சேமிப்பு - ரூ. 30 லட்சம்
மாதாந்திர ஈஎம்ஐ தொகையை குறைக்காமல் இந்த நபர் தொடர்ந்து செலுத்தி வந்தால் அவர் தன்னுடைய கடனை 240 மாதங்கள் என இல்லாமல் 204 மாதங்களிலேயே முடித்து விடுவார். எனவே அவர் செலுத்தும் மொத்த வட்டியும் 77.39 லட்சம் ரூபாய் என குறைந்துவிடும். 20 ஆண்டுகள் என இல்லாமல் 17 ஆண்டுகளிலேயே கடனை முடித்திடலாம், சுமார் 30 லட்சம் ரூபாய் வட்டியை சேமிக்கலாம்.
எனவே கடன் வாங்கிய நபர் மாதாந்திர ஈஎம்ஐ தொகையை குறைத்தால் மாதம் தோறும் ஒரு சேமிப்பு கிடைக்கும், அதுவே ஈஎம் ஐ தொகை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைத்தால் பெரிய அளவில் பணத்தை சேமிக்கலாம்.


Click it and Unblock the Notifications