சென்னை: ஸ்மார்ட்போன்கள் வழியாக உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது. அதே போல மோசடிகளும் தற்போது ஸ்மார்ட்போன்களை மையப்படுத்தி வந்துவிட்டன. அந்த வகையில் புது எண்களில் இருந்து அழைப்பு வந்தாலே நாம் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டி இருக்கிறது. இதனால் உண்மையான நம்பகமான அழைப்புகளையும் நாம் அணுக முடியாமல் போகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ட்ரூகாலர் செயலி, யுபிஐ அடிப்படையிலான காலர் வெரிஃபிகேஷன் நடைமுறையை தன்னுடைய செயலியில் அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக நமக்கு தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது எனும் போது ட்ரூகாலர் செயலி வழியாக நாம் அவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பெரும்பாலானவர்கள் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே யுபிஐ அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பை ட்ரூகாலர் கொண்டு வந்துள்ளது.

ட்ரூகாலர் செயலி இந்தியாவில் தங்களுடைய ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களின் அடையாளத்தை சரி பார்த்துக் கொண்டு அதன் மூலம் VERIFIED என்ற அடையாளத்தை பெற முடியும். எனவே நீங்கள் ஒருவரை அழைக்கும் போது VERIFIED BADGE காட்டும் என்பதால் நம்பகமான அழைப்பு தான் என எதிர்தரப்பில் இருப்பவர்கள் உணர்வார்கள்.
எக்ஸ், லிங்குடின் உள்ளிட்ட தளங்களில் வெரிஃபைட் என்கிற பேட்ஜை எப்படி பெறுகிறோமோ அதேபோல ட்ரூ காலர் செயலிலும் இந்த வெரிஃபைடு என்ற ஒரு பேட்ஜ் கிடைக்கும். இது நம் மீதான நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே பயனாளர்கள் யுபிஐ அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை கொண்டு அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பெரும்பாலான பிரீமியம் பயனாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான அதே வேளையில் நம்பகத்தன்மையான முறையில் அடையாளங்களை நிறுவுவதற்கு மற்ற சமூக வலைத்தளங்களில் இருப்பதைப் போன்று வெரிஃபைடு பேட்ஜ் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்களாம். அதன் அடிப்படையில் தான் இந்தியாவில் ட்ரூகாலர் பயனாளர்களுக்கு இப்படி ஒரு வசதியை கொண்டு வந்திருப்பதாக ட்ரூகாலர் நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த மேலாண் இயக்குனரான ரிஷித் ஜூன் ஜூன்வாலா தெரிவித்துள்ளார்.
இந்த அம்சம் தற்போது இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் உலக நாடுகளுக்கெல்லாம் இது கொண்டுவரப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது டிஜிட்டல் தகவல் தொடர்பு உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications