யாரு எப்ப எப்படி ஆவார் என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் தனது ரூ.85,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது தோட்டக்காரருக்கு தானமாக கொடுக்க உள்ளார். இவர் வேறுயாருமல்ல பிரான்ஸின் புகழ்பெற்ற ஹெர்மீஸ் நிறுவனத்தின் நிறுவனர் தியரி ஹெர்மீஸின் கோடீஸ்வர பேரன் நிக்கோலஸ் பியூச்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஹெர்மீஸ் நிறுவனம் 1837ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வீட்டு அலங்கார பொருட்கள், லெதர் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள், வாசனை திரவியங்கள், நகைகள், வாட்ச், ஆடைகள் என பல்வேறு ஆடம்பர பொருட்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் நிறுவனரான தியரி ஹெர்மீஸின் கோடீஸ்வர பேரன் நிக்கோலஸ் பியூச். 2014ல் ஹெர்மீஸின் போட்டி நிறுவனமான எல்விஎம்எச், ஹொ்மீஸில் 23 சதவீத பங்குகளை திருட்டுத்தனமாக வாங்கியது. இதனையடுத்து ஹெர்மீஸின் மேற்பார்வை குழுவில் இருந்து நிக்கோலஸ் பியூச் வெளியேறினார். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் அவருக்கு நல்ல உறவு இல்லை.
தற்போது 80 வயதாகும் நிக்கோலஸ் பியூச் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். குழந்தையும் கிடையாது. தற்போது இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.85,000 கோடி (900 கோடி சுவிஸ் பிராங்). சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் நிக்கோலஸ் பியூச் தனது 51 வயதான முன்னாள் தோட்டக்காரரை தத்தெடுத்து அவரை தனது அடுத்த வாரிசாக அறிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான மனக்கசப்பு காரணமாக தமது வாரிசாக தோட்டக்காரரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நிக்கோலஸ் பியூச்சின் வாரிசின் பெயர் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அவர் 51 வயதான முன்னாள் தோட்டக்காரர் என்றும் அவர் ஸ்பெயின் பெண்ணை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளின் தந்தை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெளி உலகுக்கு பெயர் தெரியாத அந்த தோட்டக்காரர் நிக்கோலஸ் பியூச்சின் செல்வத்தின் குறிப்பிடத்தக்க செல்வத்தை பெறுகிறார். ஹெர்மீஸ் குழுமத்தின் 20,000 கோடி டாலர் சொத்துக்களில் 5 அல்லது 6 சதவீத உரிமையை தனது வாரிசுக்கு கைமாற்ற உள்ளார்.
நிக்கோலஸ் ஏற்கனவெ மொராக்கோ மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது வாரிசாக ஆகப்போகும் தோட்டக்காரரிடம் கொடுத்து விட்டதாக கேள்வி. இருப்பினும் தனது தோட்டக்காரரை தத்தெடுத்து தனது வாரிசாக அறிவிப்பதில் சில சவால்களை எதிர்கொள்கிறார்.
அவர் வசிக்கும் சுவிட்சர்லாந்தில் வயது வந்தோருக்கான தத்தெடுப்புகள் அரிதானது மற்றும் சிக்கலான தேவைகளுக்கு உட்பட்டது. தகவல்களின்படி, அந்நாட்டில் ஒரு வயது வந்தவர் குறைந்தது ஒரு வருடமாவது ஒன்றாக வாழ்ந்தால் மற்றொரு பெரியவரை தத்தெடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications