ஹீரோ குழுமத்தின் சுமன் காந்த் முன்ஜால் தலைமையிலான ஹீரோ எலக்ட்ரானிக்ஸ், பெங்களூரில் தலைமையகமாக கொண்டு உலகில் பல நாடுகளில் இயங்கி வரும் டெஸ்ஸால்வ் (Tessolve) என்னும் நிறுவனத்தில் சுமார் 30% பங்கை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் டெஸ்ஸால்வ் நிறுவனத்தின் மதிப்பை சந்தையில் சுமார் 450 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட உள்ளது.
ஹீரோ குழுமம் ஆட்டோமொபைல் துறையில் இருந்தாலும் பல துறையில் தனது கிளை நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்து இயங்கி வருகிறது. இப்படி தான் செமிகண்டக்டர் துறையில் இயங்கி வரும் டெஸ்ஸால்வ் நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளை பெற்றது Hero Electronix.

டெஸ்ஸால்வ்-ன் வளர்ச்சி பயணம்:
டெஸ்ஸால்வ் 2004-இல் தொடங்கப்பட்டு, இப்போது ஒரு முழு செமிகண்டக்டர் (semiconductor) சொல்யூஷன் வழங்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் சிப் டிசைன், டெஸ்டிங்க், உற்பத்தி சேவை மற்றும் embedded software ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் உலகின் டாப் 20 செமிகண்டக்டர் நிறுவனங்களில் 80% நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவது மட்டும் அல்லாமல் 10 நாடுகளில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை வர்த்தகம் செய்து வருகிறது.
பங்கு விற்பனை:
ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் கடந்த ஆண்டு முதல் டெஸ்ஸால்வ் நிறுவனத்தில் சுமார் 30% பங்கு விற்பனையை திட்டமிட்டு வருகிறது, இது 2016-இல் ராஜா மணிக்கம் என்பவரிடமிருந்து டெஸ்ஸால்வ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை கையகப்படுத்திய பின்னர் தற்போது ஒரு பகுதியை விற்று வெளியேற முடிவு செய்துள்ளது.
தற்போது ஹீரோ எலக்ட்ரானிக்ஸுக்கு டெஸ்ஸால்வ்-ல் 58% பங்கு உள்ளது, சிங்கப்பூர் அடிப்படையிலான PE நிதி நிறுவனமான நோவோ டெல்லஸ் கேப்பிடல் பார்ட்னர்ஸ்-யிடம் 32% பங்குகள் உள்ளது. மீதமுள்ள பங்குகள் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான ராஜா மணிக்கம், குவால்காம் வென்சர்ஸ், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களின் ESOP பிரிவுகளில் உள்ளது. இந்த பங்கு விற்பனைக்கு ஜெஃப்ரீஸ் ஆலோசகராக விளங்குகிறது.
தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம்:
ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் இந்த டெஸ்ஸால்வ் பங்குகளை பல முன்னணி தனியார் முதலீட்டு (PE) நிறுவனங்கள் வாங்க ஆர்வம் காட்டியுள்ளது. இதில் முக்கியமாக அட்வென்ட் இன்டர்நேஷனல், TPG க்ரோத், கெடாரா கேப்பிடல், கோல்ட்மன் சாக்ஸ் மற்றும் கிரிஸ்கேப்பிடல் ஆகியவை பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications