பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரும் விற்பனையாளருமான ஹீரோ மோட்டோகார்ப், ஓலா போலவே எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை VIDA என்னும் பிராண்டில் அறிமுகம் செய்து தனது வர்த்தக சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் வேளையில் இத்துறையில் அடுத்தகட்டமாக 3 சக்கர வாகன பிரிவில் பெரும் புரட்சியைச் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான அல்டிகிரீன் புரொபல்ஷன் லேப்ஸில் ரூ. 900 கோடி முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பவன் முஞ்சால் தலைமையிலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 11 ஆண்டுகளாகத் தனது தொழில் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வரும் அல்டிகிரீன் புரொபல்ஷன் லேப்ஸ்-ல் முதலீடு செய்ய வாய்ப்பு தேடி வருகிறது. இரு நிறுவனங்கள் மத்தியிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறது.
மேலும் இந்த 900 கோடி ரூபாய் முதலீடும், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற மாபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான் உடனான கூட்டணியும் அல்டிகிரீன் நிறுவனம் விரைவாக வளர உதவும்.
அல்டிகிரீன் தற்போது டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் லாஸ்ட் மைல் சேவைக்காக எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப், புதிய வர்த்தக பிரிவில் களமிறங்கும். இந்தியாவில் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகன துறையில் முக்கிய இடத்தை ஹீரோ மோட்டோகார்ப் பிடிக்கும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இது ஹீரோ மோட்டோகார்ப்-ன் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன (EV) முதலீடாக இருக்கும். இதற்கு முன்னர் ஏதர் எனர்ஜி நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து 40% பங்கைக் கொண்டுள்ளது, ஜூன் மாதம் கூடுதலாக 2.2% பங்கிற்கு ரூ.124 கோடி முதலீடு செய்துள்ளது.
HMC இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் எலக்ட்ரிக் வாகன பிரிவில் பெரும் வளர்ச்சியை எதிர்நோக்கி தனது முதலீட்டையும், வர்த்தகத்தையும் நகர்த்தி வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப், ஆகஸ்டில் தனது விற்பனை எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 5% அதிகரித்து 5,12,360 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, ஆகஸ்ட் 2023ல் ஹீரோ 4,88,717 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.


Click it and Unblock the Notifications