டெல்லி: உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் தாக்கம், இந்தியா வர்த்தகத்தையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சரிவையே சந்தித்து வரும் ஆட்டோமொபைல் துறை, சீனாவின் புதிய வைரஸான கொரோனாவால் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அட சீனாவில் வைரஸ் பரவினால் இந்தியா எதற்காக, அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பாதிக்கப்படப் போகிறது என்று கேட்கிறீர்களா?
வீழ்ச்சி காணலாம்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களின் பெரும்பாலான உதிரி பாகங்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவில் இருந்து தானே. ஆக சரியான நேரத்தில் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காவிட்டால் என்னவாகும். உற்பத்தி சரியத் தானே செய்யும். இதனால் ஆட்டோமொபைல் துறை நிச்சயம் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
உதிரி பாகங்கள் கிடைக்குமா?
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, சில வணிகங்களை இது பாதித்துள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரி பாகங்களும் ஒன்று. ஆக கொரோனாவின் தாக்கத்தினால் பிப்ரவரியில் உற்பத்தியை 10% குறையலாம் என்றும் தெரிவித்துள்ளது.
முக்கிய பாகங்கள் சில கிடைக்கவில்லை
எவ்வாறாயினும் இந்த மாதத்தில் அதன் விற்பனையாளர்களுக்கு மொத்தமாக வாகனங்களை அனுப்புவது பாதிக்கப்படாமல் உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸினால், இந்தியாவில் எங்கள் உற்பத்திக்கு தேவையான சில பாகங்களை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
உற்பத்தி பாதிக்கும்
இந்த பிரச்சனையினால் எங்கள் திட்டமிடப்பட்ட உற்பத்தியை சுமார் 10% வரை இது பாதிக்கக்கூடும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் அதிகரித்து வரும் எந்தவொரு தாக்கமும் வாகன உற்பத்தியில் எதிரொலிக்கலாம் என்றும் ஹீரோ மோட்டோ கார்ப் கூறியுள்ளது. ஆக நாங்கள் தொடந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் ஹீரோ மோட்டோ கார்ப் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications