இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் 7 மாத உயர்வை அடைந்தது மட்டும் அல்லாமல் கடந்த 3 மாதத்தில் சுமார் 58 சதவீத வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்ததைப் போலவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்குகளின் மதிப்பும் அதிகளவில் சரிந்தது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனை சந்தை மீண்டு வருகிறது.
மக்கள் அதிகளவிலான சம்பள குறைப்பு, வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றைச் சந்தித்து வரும் நிலையில் மக்கள் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களை அதிகளவில் வாங்கும் சூழ்நிலை இருப்பதால் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் வெறும் 3 மாதத்தில் 58 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முக்கிய வர்த்தகம்
இந்த லாக்டவுன் காலத்தில் இந்திய ஊரகப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு விவசாயம் மற்றும் MNREGA திட்டத்தின் மூலம் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்திய கிராமங்களில் தற்போது பணப் புழக்கம் சற்றுக் கூடுதலாக உள்ளது.
இதேபோல் ஊரடங்கு காரணமாகச் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுள்ள பல கோடி மக்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே பல வளர்ச்சி திட்டத்தில் MNREGA மூலம் வேலைவாய்ப்பைக் கொடுத்து வருகிறது மத்திய அரசு.
பணப்புழக்கம்
இதன் எதிரொலியாக இந்திய ஊரகப் பகுதிகளில் தற்போது இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாகியுள்ளதாகச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதேபோல் பல மாநிலங்களில் இருசக்கர வாகனங்களின் டிமாண்ட் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இது ஆட்டோமொபைல் சந்தைக்கு மிகப்பெரிய வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஹீரோமோட்டோ கார்ப்
2021ஆம் நிதியாண்டில் ஹீரோமோட்டோ கார்ப், இந்திய கிராமங்களில் ஏற்பட்டுள்ள புதிய தேவையின் மூலம் அதிகளவிலான லாபத்தையும், வர்த்தகத்தையும் அடைந்தாலும், இந்திய நகரங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் நகர மக்கள் அதிகமானோர் பர்சனல் டிரான்ஸ்போர்ட் அதிகமாக நாடுகின்றனர்.
இதனால் அடுத்தச் சில வாரங்களில் நகரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துவிடும். ஆனால் ஹீரோமோட்டோ கார்ப் நகரங்களில் பெரிய அளவிலான வர்த்தகம் இல்லாத காரணத்தால் இந்தப் புதிய தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
அடுத்த சில வருடங்களுக்கு ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்திற்குக் குறைவு இருக்காது என்பதால் இந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாகத் தான் 3 மாதத்தில் 58 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications