இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை சர்வதேச சந்தையில் இருந்து புதிய திட்டங்களை பெறுவதில் போராடி வரும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதில் பெரும் மந்த நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஹெக்ஸாவேர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்திய ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், 2024 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, போலந்து மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் சுமார் 6,000 முதல் 8,000 புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் திறமையான டெக் ஊழியர்களை எங்கள் அணியில் சேர்ப்பதற்காக தேடி வருகிறோம் என்று ஹெக்ஸாவேர் நிறுவனத்தின் டேலென்ட் சப்ளை செயின் பிரிவின் உலகளாவிய தலைவர் மற்றும் நிர்வாக துணை தலைவர் ராஜேஷ் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில், ஹைதராபாத், நொய்டா, கோயம்புத்தூர், டேராடூன் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பணியாளர்களை பணிக்கு எடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அகமதாபாத், இந்தூர், புனே, மும்பை, சென்னை, டேராடூன், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இண்டர்வியூவ் நடத்தவும் ஹெக்ஸாவேர் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு பல துறையில் திறன்மிக்க அதிகாரிகள் தேவையென கூறுகிறது, இதில் குறிப்பாக, சர்வீஸ்நவ் (ServiceNow) டெக் லீட், ஆட்டோமேஷன் டெஸ்டிங் நிபுணர்கள், AEM ஆர்கிடெக்ட், பிக் டேட்டா லீட் மற்றும் வொர்க்டே (Workday) பைனான்சியல் கன்சல்டென்ட் போன்ற பணிகளுக்கான அதிகாரிகள் தேவை என தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, வேலைவாய்ப்புகளைத் தேடும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications