மும்பை: ஐடி சேவை நிறுவனமான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்வதற்காக இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி-யிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் 9,950 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு இது பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. ஐபிஓ வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் ஐடி துறையில் வெளியாக கூடிய மிகப்பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும்.
தற்போதைய சூழலில் இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஐடி பிரிவு ஐபிஓவாக கருதப்படுவது டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் ஆகும். டிசிஎஸ் நிறுவனம் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம்.

டிசிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு 4,713 கோடி மதிப்பீட்டில் ஐபிஓ வெளியீடு செய்தது . தற்போது ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை விட இரண்டு மடங்கு அதிக மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடுவதற்கு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த ஐபிஓ வெளியீடு ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்குகளை விற்பனை செய்வதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதற்காக ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் கோட்டக் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் , சிட்டி குளோபல் மார்க்கெட், ஜே பி மார்கன், ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டிஸ் மற்றும் ஐஐஎப்எல் செக்யூரிட்டிஸ் ஆகிய முதலீட்டு வங்கிகளை ஐபிஓ வெளியீட்டுக்காக நியமனம் செய்துள்ளது.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பொருத்தவரை இந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகள் அமெரிக்காவை சேர்ந்த தனியார் ஈக்விட்டி நிறுவனமான காரல் குழுமத்திடம் இருக்கிறது.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சர்வதேச அளவில் செயல்படக்கூடிய ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். உலகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு 61 இடங்களில் அலுவலகங்கள் செயல்படுகின்றன. 31,000 பேர் இந்த நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
370 வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் ஐடி துறை சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் முழு கவனம் செலுத்தி வருகிறது. 2002ஆம் ஆண்டு ஐபிஓ வெளியீடு செய்து ஹெக்ஸாவேர் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு இது பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் எடுத்த முடிவின் காரணமாகவே இது பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டது.
Written by: Devika


Click it and Unblock the Notifications